இத்தலத்தில் உள்ள சப்த சாகரதீர்த்தம் மிக்க பெருமையுடையது. இதில் நீராடினால் உடற்பிணி நீங்கப் பெறுவர். குந்திதேவி, கர்ணனை பெட்டியில் வைத்து ஆற்றில் வைத்துவிட்ட பாவத்திற்குப் பிராயச்சித்தமாகத் தௌமிய முனிவர் சொற்படி இத்தலத்தையடைந்து, இங்கு இருந்த உரோமசர் முனிவரைப் பார்த்துத் தனக்குக் கழுவாய் கூறுமாறு வேண்டினாள். அவரும் “நாளை மாசிமகம். சப்த சமுத்திர ஸ்நானம் செய்க” என்றார். “நாளைக்குள் எங்ஙனம் ஏழுகடல்களில் ஸ்நானம் செய்ய முடியும்?” என்று, அவளும் இறைவனை வேண்ட, அவள் வேண்டுதலையேற்ற இறைவனும் இத்தீர்த்தத்தினை ஏழுகடல்களாகப் பாவித்து நீராடுமாறு அருள, குந்தியும் அவ்வாறே நீராடிப் பாவம் தீரப்பெற்றாள் என்று சொல்லப்படுகிறது. (கோயிலுள் குந்தியின் உருவம் உள்ளது மேலே குறிக்கப்பட்டுள்ளது.) இதனால் இத்தீர்த்தம் ‘சப்தசாகர தீர்த்தம்’ என்று பெயர் பெற்றது. முசுகுந்தன், இந்திரனிடமிருந்து தியாகராஜப் பெருமானைப் பெற்றுத் திருவாரூர் செல்லும்போது இத்தலத்தில் மூன்று நாள்கள் இருந்து, தியாகராஜப் பெருமானை எழுந்தருளுவித்துப் பூசித்து வழிபட்டான் என்னும் பெருமையுடைய இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் அருளாட்சிக்கு உட்பட்டதாகும். கமலைவைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டுள்ள திருநல்லூர்ப் புராணம். உரைநடைப்படுத்தி, திருவாவடுதுறை ஆதீனத்தில் வெளியிடப்பட்டுள்ளது. “அலைமல்கு தண்புனலும் பிறையஞ்சூடி அங்கையில் கொலைமல்கு வெண்மழுவும் அனலும் ஏத்துங்கொள்கையீர் சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர் மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.” (சம்பந்தர்) “நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்துவானோர் இனந்துருவி மணிமகுடத்தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப்பில்கி நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே.” (அப்பர்) |