இறைவனை உமை வழிபட்டுத் தழுவி முத்தமிட்டதால் ‘சத்தி முத்தம்’ என்று வழங்குகிறது. மூலவர் பக்கத்தில் இறைவி சிவலிங்கத்தைக் கட்டித் தழுவி முத்தமிட்ட திருக்கோல உருவத்தைத் தரிசிக்கலாம். அப்பர், தனக்குத் திருவடி தீட்சையருளுமாறு வேண்டிப்பாட, இறைவன் திருநல்லூருக்கு வருமாறு அருளிய சிறப்புடைய பதி. இவ்வாறு அருளிய மூர்த்தியே இங்கு மூலவராகவுள்ளார். இறைவன் - சிவக்கொழுந்தீசர் இறைவி - பெரியநாயகி தீர்த்தம் - சூலதீர்த்தம் அப்பர் பாடல் பெற்றது. பெரிய கோயில். கிழக்கு நோக்கியது. வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறார். ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. வெளிப் பிராகாரம் பெரியது. இரண்டாங் கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. நடராச சபை உள்ளது. மூல வாயிலின் முன்னால் ஒருபுறம் சோமாஸ்கந்தரும், மறுபுறம் சத்தி, முத்தம் தரும் தல ஐதீக மூர்த்தியும் உள்ளனர். உட் பிராகாரத்தில் தலவிநாயகரும் சோமாஸ்கந்தரும் ஆறுமுகர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. சம்பந்தர் இத்தலத்திலிருந்து இறைவன் அருளிய முத்துப்பந்தர் நிழலில் திருப்பட்டீச்சரம் சென்று வணங்கிப் பதிகம் பாடினார். ‘நாரைவிடுதூது’ பாடிய சத்திமுற்றுப்புலவர் இவ்வூரினரே. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தின்கீழ் இக்கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கல்வெட்டில் இறைவன் திருச்சத்தி முற்றம் உடையார், திருச்சத்திவனப் பெருமாள் எனக் குறிக்கப்படுகிறார். அக்காலத்தில் கோயில் நிலங்களில் வரிகளை வசூலிக்கும் விதிமுறைகளைப் பற்றியும், விளக்கெரிக்க காசும் ஆடும் அளித்ததையும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. “கருவுற்றிருந்து உன்கழலே நினைந்தேன் கருப்புவியில் தெழிவிற் புகுந்தேன் திகைத்து அடியேனைத் திகைப்பொழுவி உருவிற் றிகழும் உமையாள் கணவா!விடில் கெடுவேன் திருவிற் பொலி சத்தி முற்றத் துறையும் சிவக் கொழுந்தே.” (அப்பர்) |