பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 471


141/24. பழையாறைவடதளி

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

    கும்பகோணம் - ஆவூர் பாதையில் முழையூர் சென்று அவ்வழியாக
இத்தலத்தை அடையலாம்.

    சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கிய தலம். பல்லவ
மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள்
வாழ்ந்த இடம் பழையாறை பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர்
இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம்
“சோழமாளிகை” என்னும் தனி ஊராக உள்ளது.

    தேவார காலத்தில் (1) முழையூர் (2) பட்டீச்சரம் (3) சத்திமுற்றம்
(4) சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின்
நாற்படையூர்களாக விளங்கின. இவ்வூர் (1) கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் -
பழையாறை நகர் என்றும், 8-ஆம் நூற்றாண்டில் - நந்திபுரம் என்றும், 9,10-
ஆம் நூற்றாண்டில் முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில்
இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றது.

    பழையாறை நான்கு சிறு பிரிவுகளாகும்.

    1) வடதளி :- தாராசுரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவு, அப்பர்
உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை. சிதலமான
கோயில் உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் துறையூர் சிவப்பிரகாசர்
சமாதியுள்ளது.

    2) மேற்றளி

    3) கீழ்த்தளி (பழையாறை)

    4) தென்தளி.

    இத்தகு சிறப்புடைய இவ்வூர் சிற்றூராகவுள்ளது. தெற்கிலும் வடக்கிலும்
முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடி
கொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன்
கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது. அதன் வடகரையில் உள்ள
ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது.

    சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணாநோன்பிருந்து
வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் தலம். மங்கையர்க்கரசியார்,
அமர்நீதி நாயனார் ஆகியோர் அவதரித்த தலம். அப்பர் பாடல் பெற்றது.