கும்பகோணத்தில் குடமூக்கு - கும்பேசுவரர் கோயில் குடந்தைகீழ்க் கோட்டம் - நாகேசுவர சுவாமி கோயில் குடந்தைக் காரோணம் - சோமேசர் கோயில் என வழங்கப்படுகிறது. மூர்க்கநாயனார் தொண்டு செய்து வாழ்ந்த தலம். ஏமரிஷி பூசித்த பதி. தலவரலாற்றின்படி :- (1) அமுதகும்பம் வைத்திருந்த இடம் - கும்பேசம் (2) அமுதகும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - சோமேசம் (3) அமுதகும்பத்தில் சார்த்தியிருந்த வில்வம் இடம் - நாகேசம் (4) அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் - அபிமுகேசம் (5) பெருமான் அமுதகுடத்தை வில்லால் சிதைத்த இடம் - பாணபுரேசம் (பாணாதுறை) (6) கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த பூணூல் சிதறிய இடம் - கௌதமீசம் என வழங்கப்படுகின்றன. மகாமகத் தீர்த்தக் கரையில் சுற்றிலும் பிரமதீர்த்தேசம், முகுந்தேசம், தனேசம், ரிசபேசம், பாணேசம், கோனேசம், பக்தேசம், பைரவேசம், அகத்தீசம், லியோகேசம், கங்காதரேசம், பிரமேசம், முத்ததீர்த்தேசம் முதலிய ஆலயங்கள் உள்ளன. இந்நகரிலுள்ள 14 தீர்த்தங்களில் தடாகங்கள் 7, கிணறுகள் 3, காவிரித்துறைகள் 4 ஆகும். மகாமகக்குளத் திருப்பணியும் அதைச்சுற்றிப் பதினாறு சிவலாய விமானங்களையும் அமைத்த மகான், அச்சுதப்ப நாயக்க மன்னனின் அமைச்சரான கோவிந்த தீக்ஷிதர் ஆவார். இவர் தன் துலாபாரத் தங்கத்தைக் கொண்டே இத்திருப்பணிகளை யெல்லாம் செய்திருக்கிறார். கும்பேசுவரர் கோயிலில் இவருடைய வடிவம் உள்ளது. சுமார் 300 வருஷங்களுக்கு முன்பு இவரால் நிறுவப்பட்டதே ராஜா வேதபாடசாலை. இவருக்கு அந்தக் காலத்தில் ஐயன் என்று பெயர். கும்பகோணத்திலுள்ள ஐயன்தெரு இவர் பெயரால் ஏற்பட்டது. தஞ்சாவூரிலுள்ள ஐயன் தெரு, ஐயங்குளம், பசுபதி கோவிலுக்கு அடுத்த ஐயம்பேட்டை, திருவாரூருக்கு மேற்கிலுள்ள மணக்கால் ஐயம்பேட்டை போன்ற இடங்களெல்லாம் இவருடைய |