பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 479


      அறுபத்துமூவர் திருமேனிகள் அற்புதத் தரிசனம். அடுத்து உற்சவ
மூர்த்தங்கள் - வீரபத்திரர், சப்தகன்னியர், அஷ்டலிங்கங்கள் முதலிய
சந்நிதிகள். வலப்பால் சோமாஸ்கந்தர் காட்சி. வலஞ்சுழி விநாயகரும்,
மகாலிங்கேசுவரரும் இங்கேயும் தரிசனம் தருகின்றனர். பிட்சாடனர், சண்முகர்,
கார்த்திகேயர், சிவலிங்கமூர்த்தங்கள். அன்னபூரணி, மகாலட்சுமி, சரஸ்வதி
ஆகியோர் திருமேனிகளைத் தொழுது, அம்பாளையும் சேர்ந்து வலமாக
வருகின்றோம்.

      மங்களாம்பிகை சந்நிதி - தொழும்போதே சாந்தத்தையும் மன
நிறைவையும் தருகின்ற வகையில் அழகாக அமைந்துள்ளது. பெயருக்கேற்ற
திருக்கோலம். அடுத்து; ‘அமுதகடத்தை வில்லாலடித்துச் சிதறச்செய்த
மூர்த்தியாக - கிராதகோலத்தில் இறைவன் காட்சி தருகிறார். பைரவர், மூன்று
திருவடிகளுடன் ஜ்வரஹரேசுவரர் சாஸ்தா, பக்கத்தில் கோவிந்ததீக்ஷிதர்
அவருடைய மனைவியார், சந்திர சூரியர்கள் முதலிய சந்நிதிகளைத்
தொழுதவாறே படியேறிச் செல்லும்போது நடராசசபை தரிசனம். வாயிலைக்
கடந்தால் நேரே மூலவர் தரிசனம்.

     கும்பேசுவரர் - சிவலிங்கத் திருமேனி. பருத்து - சற்று சாய்ந்த பாணம் -
திருமேனி (பிருதிவி) மணல் லிங்கமாதலின் தங்கக்கவசம் சார்த்தப்பட்டுள்ளது.
பாணத்தின் உச்சி கும்பத்தின் வாயைப் போலவுள்ளது. புனுகுசட்டம்
சார்த்தப்படுகிறது. நாடொறும் ஆறுகால பூஜைகள். 1722ல் இருந்த ஸ்ரீ காஞ்சி
காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ மஹாதேவந்திர சரஸ்வதி சுவாமிகள்
திருப்பணிகளைச் செய்துள்ள இத்திருக்கோயில் இப்போதும் அம்மரபு வழியில்
ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத்
திட்டத்தில் கும்பகோணம் பொன்விழாக் கமிட்டியார் மூலமாக ரூ.15 லட்சம்
செலவில் திருப்பணிகள் செய்து 24.11.1985ல் மகாகும்பாபிஷேகம்
செய்யப்பட்டுள்ளது.

      இத்தலத்தில் உள்ள வைணவத் திருக்கோயில்களுள்,

    (1) அ/மி. சாரங்கபாணிப் பெருமாள் கோயில்
    (2) அ/மி. சக்ரபாணிப் பெருமாள் கோயில்
    (3) அ/மி. இராமசாமி கோயில்
    (4) அ/மி. வரதராசப் பெருமாள் கோயில்

    முதலியவை சிறப்புடையன. திருக்குடந்தைப்புராணம் - தலபுராணம்
மகாவித்வான். மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ளார்.