பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 483


திருமேனியைப் பகவத்ரிஷி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். இங்குள்ள
விஷ்ணு துர்க்கை சந்நிதி விசேஷமானது. வெள்ளிக்கவச தரிசனம் மன
நிறைவு தருகிறது. வைத்தீஸ்வரர், சூரியன், சோமாஸ்கந்தர், சண்டேசுவரர்
சந்நிதிகள் உள்ளன.

     வலம் முடித்து முன் மண்டபங்கடந்து ‘சிவசிவ ஒலி மண்டபமும்’
நவக்கிரக சந்நிதியும் கண்டு, தொழுதவாறே சென்றால் நேரே மூலவர்
தரிசனம். மூலவர் - அழகான திருமேனி - உயரமான ஆவுடையார் -
மிகவும் குட்டையான பாணம். பிறைசூடி, நாகாபரணம் கொண்டு தரும்
தரிசனம் மிகவும் பொலிவாகவுள்ளது. கருவறை வாயிலில் தண்டூன்றிய
விநாயகர் உள்ளார். கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரி,
- ரிஷபத்தின் முன் நின்று வலக்கையை ரிஷபத்தின் தலைமீதூன்றி
நிற்கும்நிலை, பிரம்மா முதலிய சந்நிதிகள் உள்ளன.

     அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. பள்ளியறை உள்ளது.
அம்பாளின் பக்கத்தில் உள்ளது ஆடிப்பூர அம்மன் சந்நிதி. இத் திருமேனி
அம்பாளுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. அம்பாள் வரத அபயத்துடன்
கூடிய நின்ற திருக்கோலம். நாடொறும் ஐந்து கால வழிபாடுகள்
நடைபெறுகின்றன. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர
சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தின் கீழ்
திருப்பணிகள் 29-11-85ல் தொடங்கப்பட்டுச் செய்யப்பட்டுள்ளன.

     ‘பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்’ என்னும் மகான் ; புதர்
மண்டிக்கிடந்த இத் திருக்கோயிலைச் சீர்திருத்தித் திருப்பணிகள் செய்வித்து
1923ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார். ராஜகோபுரம்,
மேற்குக் கோபுரம், நடராசசபை, சுற்றுச்சுவர்கள், சிங்கமுகதீர்த்தக்கிணறு
முதலிய திருப்பணிகள் அவரால் செய்யப்பட்டவை. இதற்காக இம் மகான்,
தம் கழுத்தில் பித்தளைச் செம்பு ஒன்றை உண்டிக் கலயமாகக் கட்டிக்
கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சையெடுப்பது போல நிதி திரட்டிய
அருஞ்செயலை இன்றும் கேட்டாலும், நினைத்தாலும் நம் மனம்
நெகிழ்கின்றது.

     “சொன்மலிந்த மறை நான்காறங்கமாகிச்
          சொற்பொருளும் கடந்த சுடர்ச் சோதிபோலும்
      கன்மலைந்த கயிலைமலை வாணர் போலும்
          கடல்நஞ்சம் உண்டுஇருண்ட கண்டர்போலும்
      மன்மலிந்த மணிவரைத் திண்தோளர்போலும்
          மலையரையன் மடப்பாவை மணாளர்போலும்
      கொன்மலிந்த மூவிலைவேற் குழகர்போலும்
          குடந்தைக்கீழ்க் கோட்டத் தெங்கூத்தனாரே.”   (அப்பர்)