பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 49


9. வன்பார்த்தான் பனங்காட்டூர்

திருப்பனங்காடு

     தொண்டை நாட்டுத் தலம்.

     மக்கள் வழக்கில் திருப்பனங்காடு என்று வழங்குகிறது.
காஞ்சிபுரத்திலிருந்து கலவை, பெருங்கட்டூர் செல்லும் பேருந்தில் ஏறித்
திருப்பனங்காடு கூட்டுரோடில் இறங்கி, (திப்பனங்காடு செல்லும்) பாதையில்
2 கி.மீ. சென்றால் ஊரையடையலாம். நடந்து செல்லும் போது வழிக்களைப்பு
தெரியாதவாறு சாலை ஓரத்தில் புளிய மரங்கள் நிழல்தந்து உதவுகின்றன.
ஊர்க்கோடியில் கோயிலுள்ளது. நல்ல சாலை. தனிப்பேருந்தில், காரில்
வருவோர் கோயில்வரை செல்லலாம். பனையைத் தலமரமாகக் கொண்ட
பாடல் பெற்ற தலங்கள் ஐந்தனுள் இதுவும் ஒன்று. ஏனையவை (1)
திருப்பனந்தாள் (2) திருப்பனையூர் (3) திருவோத்தூர் (4) புறவார்
பனங்காட்டூர் என்பன.

     சுந்தரரிடம் இறைவன், ‘நான் பனங்காட்டிற்கும் வன்பாக்கத்துக்குமாய்
இருப்பவன்’, என்றருளியமையாலும், புறவார் பனங்காட்டூரினின்றும்
வேறுபாடறியவும் இத்தலத்தை ‘வன்பார்த்தான் பனங்காட்டூர்’ என்று சுந்தரர்
பாடியுள்ளார். பனைமரக்காடாக இருந்தமையால் ‘பனங்காடு’ (தாலவனம்)
என்று பெயர் பெற்றது.