பக்கம் எண் :

50 திருமுறைத்தலங்கள்


     வன்பாக்கம்  என்னும்  ஊர் - இவ்வூருக்குப்  பக்கத்தில்  உள்ளது.
அதுவே இன்று வெண்பாக்கம் - வெம்பாக்கம் என்று வழங்குகின்றது. இது
பாடல் பெற்ற தலமன்று. திருப்பனங்காடு தான் பாடல் பெற்றது.

     சிறிய ஊர். நகரத்தார் திருப்பணி பெற்ற கோயில். கோயிலின் எதிரில்
பெரிய குளம் உள்ளது. இதற்குச் “சடாகங்கை” என்று பெயர்.    அகத்தியர்
பூசித்தபோது, இறைவன் சடாமுடியிலுள்ள கங்கை தீர்த்தமாக வெளிப்பட்டது.
இக்குளக்கரையில் கங்காதேவி சிலையுள்ளது. மாசிமகத்தில் தீர்த்தவாரியும்,
தெப்பமும் இதில் நடைபெறுகின்றன.

     அகஸ்தியர்,   புலஸ்தியர்  முதலியோர்  வழிபட்ட  தலம். வடலூர்
வள்ளற்பெருமான்    வாக்கிலும்,    பட்டினத்தடிகளின்   திருவேகம்பர்
திருவந்தாதியிலும் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது.

“நிலாவு புகழ் திருவோத்தூர் திரு ஆமாத்தூர் நிறைநீர்
  சுலாவு சடையோன் புலிவலம் வில்வலம் கொச்சை தொண்டர்
  குலாவு திருப்பனங்காடு நன் மாகறல் கூற்றம் வந்தால்
  அலாய் என்று அடியார்க்கு அருள்புரி ஏகம்பர் ஆலயமே.
                                          (பட்டினத்தடிகள்)


     இத்தலத்தில் கண்வ  முனிவர்  வழிபட்டதாகவும்  செய்தி சொல்லப்
படுகிறது. இக்கோயிலில் இரண்டு சுவாமி சந்நிதிகளும்  இரண்டு  அம்பாள்
சந்நிதிகளும் உள்ளன. அகத்தியர் வழிபட்ட மூலமூர்த்தி ஒன்று. மற்றொன்று
புலஸ்திய மகரிஷி வழிபட்டது.

     சுவாமி : 1. தாலபுரீசுவரர், அகத்தியர் வழிபட்ட மூர்த்தி, சுயம்பு.

     அம்பாள் : அமிர்தவல்லி.

     சுவாமி : 2. கிருபாநாதேசுவரர், புலஸ்தியர் வழிபட்ட மூர்த்தி.

     அம்பாள் : கிருபாநாயகி.

     தலமரம் : பனை. கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் இருபனை மரங்கள்
உள்ளன. தீர்த்தம் : சடாகங்கை. கோயிலுக்கு எதிரில் உள்ளது.

     (ஊருக்குப் பக்கத்தில் சற்றுத் தொலைவில் ‘ஊற்று தீர்த்தம்’  உள்ளது.
சுந்தரருக்கு   இறைவன் (கட்டமுது) உணவளித்த வரலாறு  இத்தலத்திற்கும்
சொல்லப்படுகிறது. இது செவி வழிச்செய்தியே. பெரிய புராணத்தில் இல்லை.
இறைவன் அப்போது தன் பாதத்தால் கிளறி உண்டாக்கிய தீர்த்தமே ‘ஊற்று
தீர்த்தம்’ (ஊற்றங்குழி) என்று பெயர் பெற்றதென்று சொல்லப்படுகிறது.)