பைத்தியம் முதலியன நீங்கும். இன்றும் இவற்றால் பீடிக்கப்பட்டோர் வந்து வலம் செய்து குணமடைவதைப் பார்க்கலாம். அடுத்துள்ள பிராகாரம் “கொடுமுடிப் பிராகாரம்” - இதன் மூலம் சுவாமியை மட்டும் வலம் வரலாம். அடுத்து பிரணவப் பிராகாரத்தினால் சுவாமியை வலம் வரலாம். இப்பிராகாரத்தில் தலமரம் உள்ளது. அம்பாள் கோயில் உள்ளது உள் பிராகாரம். (இதனுள்ளும் ஒரு பிராகாரமுள்ளது.) தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. தேரடியில் விநாயகர் கோயிலும், கீழவீதியில் விசுவநாதர் கோயிலும், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் இருக்க ; இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கின்றார். எனவே இத்தலத்தை “பஞ்ச லிங்கத் தலம்” என்றும் சொல்வர். வடக்குக் கோபுர வாயிலில் அகோர வீரபத்திரர் கோயிலும், மேற்குக் கோபுர வாயிலில் குமரன் கோயிலும் உள்ளன. கிழக்கு வாயிலில் படித்துறை விநாயகரும் பட்டினத்தாரும் ; மேல் வாயிலில் பர்த்ருஹரியாரும் தரிசனம் தருகின்றனர். சொக்கநாதர் கோயிலில் உள்ள மூர்த்திக்கு அபிஷேகம் செய்து மேகராகக் குறிஞ்சி பண்பாடினால் மழைபெய்யும் என்பது மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும். சுவாமி அம்பாள் சந்நிதிகள் கிழக்கு நோக்கியன. கோயிலின் உள்ளே உள்ள பாண்டியன் கோபுரத்தையும் சேர்த்து ஐந்து ராஜகோபுரங்கள் உள்ளன. உமாதேவியார், விநாயகர், முருகன், திருமால், காளி, இலக்குமி, சரஸ்வதி, வேதம், வசிட்டர், உரோமேச முனிவர், ஐராவணம், சிவவாக்கியர், கபிலர், அகத்தியர், வரகுண பாண்டியன் முதலியோர் இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். மருதமரத்தின் கீழே கட்டுண்ட கண்ணனின் உருவம் உள்ளது. பக்கத்தில் காவிரி ஓடுகிறது. மூலவர் மகாலிங்கேஸ்வரர் - அழகான மூர்த்தி. நிறைவான தரிசனம். அம்பாள் அழகிய கோலத்துடன் தரிசனம். அம்பிகை மௌனமாக இருந்து தவஞ்செய்த மூகாம்பிகை சந்நிதியும், மேரு பிரதிஷ்டையும் தரிசிக்கத் தக்கவை. கோயில் நன்கு பராமரிக்கப்பட்டுப் பொலிவுடன் திகழ்கிறது. தைப்பூசத்தில் சுவாமி காவிரிக்கு எழுந்தருளி ஐராவணத்துறையில் தீர்த்தம் கொடுப்பது சிறப்பாக நடைபெறுகிறது. இத்தலத்திற்குக் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பாடியுள்ள தலபுராணமும் ; மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடியுள்ள |