பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 491


‘உலா’வும் உள்ளன. (தலபுராணம் - மருதவனப்புராணம்) இத்திருக்கோயிலில்
ஆதித்தபிச்சன் என்பவனால் நிறுவப்பட்ட அறக்கட்டளைகள் ‘பிச்சைக்
கட்டளை’ என்றழைக்கப்படுகின்றன. இக் கட்டளை தருமையாதீனத்தின்
நிர்வாகத்தில் இருந்து வருகின்றது. இக்கோயிலில் 149 கல்வெட்டுக்கள் உள.
இவற்றுள் ஒரு கல்வெட்டிலிருந்து அந்நாளில் சுவாமி திருமஞ்சனத்திற்கு நீர்கொண்டுவர மண்குடங்களே பயன்படுத்தப்பட்டன என்னும் செய்தியை
அறிகிறோம். கல்வெட்டில் இத்தலம் ‘உய்யக்கொண்ட சோழவளநாட்டுத்
திரைமூர் நாட்டுத் திருவிடை மருதூர்’ என்று குறிக்கப் பெறுகின்றது.

    “பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை
     தங்குசெஞ் சடையினீர் சாமவேத மோதனீர்
     எங்கும் எழிலார் மறையோர்கண் முறையாலேத்த இடைமருதில்
     மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.”   (சம்பந்தர்)

    “சூலப்படையார்தாமே போலுஞ்
         சுடர்த்திங்கள் கண்ணியுடையார் போலும்
     மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
         மந்திரமும் தந்திரமும் ஆனார்போலும்
     வேலைக் கடல்நஞ்சை யுண்டார் போலும்
         மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
     ஏலக்கமழ் குழலாள் பாகர் போலும்
         இடைமருதுமேவிய ஈசனாரே."           (அப்பர்)
 
    “முந்திச்செய்வினை இம்மைக்கண் நலிய
         மூர்க்கனாகிக் கழிந்தன காலம்
      சிந்தித்தே மனம் வைக்கவுமாட்டேன்
         சிறுச்சிறிதே யிரப்பார்கட் கொன்றீயேன்
     அந்தி வெண்பிறை சூடும் எம்மானே
         ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
     எந்தைநீ எனக்கு உய்வகை அருளாய்
         இடைமருதுறை எந்தை பிரானே.”   (சுந்தரர்)

     எந்தையெந்தாய் சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய
     பந்தம் அறுத்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
     அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த
     பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய்யாமோ. (திருவாசகம்)