பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 499


சென்றால் அம்பாள் சந்நிதியை அடையலாம் - தனிக்கோயில். அடுத்துள்ளது
வைத்தியநாதர் சந்நிதி. புரூரவமன்னனின் குட்டநோயைத் தீர்த்த பெருமான்
இவரே. இச்சந்நிதியில் ஜபம் செய்தால் பலமடங்கு பயனுண்டு எனப்படுகிறது.
அடுத்துள்ளவை யாகசாலை மண்டபம், மகாகணபதி சந்நிதிகள். வலமுடித்து
வாயில்கடந்து, உள்மண்டபம் சென்றால் இடப்பால் பிரம்மலிங்கம்,
சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராசசபை, உற்சவத் திருமேனிகள் பாதுகாப்
பறை - நால்வர், விநாயகர்கள், அகத்திய லிங்கம், நவக்கிரகங்கள் முதலியவை
உள்ளன. சனிபகவான், பைரவர் தொழுது வாயிலைக் கடந்தால் முலவர்
தரிசனம். மூலவர் - சதுரபீடம், உயர்ந்த பாணம்.

    அம்பாள் கோயில் அழகாகவுள்ளது. நின்ற திருக்கோலம். இக்கோயிலில்
உள்ள நடராசமூர்த்தம் மிகப்பேரழகு - பெரிய உருவம். புகழ்பெற்ற
மூர்த்தி. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர். தக்ஷிணாமூர்த்தி, அகத்தியர்,
ஜ்வரஹரர், லிங்கோற்பவர், கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை
ஆகியோர் உளர். கோயில் நல்ல பொலிவு. பராமரிப்பு, கல்வெட்டில்
இறைவன் ‘திருநல்லம் உடையார்’ என்று குறிக்கப்பட்டுள்ளார். இங்குள்ள
கல்வெட்டுகள் இராசராசன், இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன்,
இரண்டாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை.
இவற்றிலிருந்து; (1) வேங்கிபுரம் முதலிப் பிள்ளை என்பவன் நன்கொடையால்
கோயில் கட்டப்பட்டதாகவும் (2) ‘நக்கன் நல்லத் தடிகள்’ என்பவனால்
சண்டேசுவரர் உற்சவத் திருமேனி செய்து தரப்பட்டது என்றும் (3) குந்தவை
பல நன்கொடைகளைக் கோயிலுக்குத் தந்துள்ளாள் என்றும் பல செய்திகள்
(கல்வெட்டுகள் வாயிலாகத்) தெரிய வருகின்றன. தலபுராணம் சமஸ்கிருதத்தில்
உள்ளது. காரணாகம முறைப்படிப் பூஜைகள் நடைபெறுகின்றன.

    “கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாஎன்(று)
     எல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
     வில்லால் அரண் மூன்றும் வெந்து விழஎய்த
     நல்லான் நமையாள் வான் நல்ல(ம்) நகரானே.”   (சம்பந்தர்)

    “பொக்கம்பேசிப் பொழுது கழியாதே
     துக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
     தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
     நக்கன் சேர் நல்ல(ம்) நண்ணுதல் நன்மையே.”   (அப்பர்)