(1) மயிலாடுதுறை, கும்பகோணம் சாலையில் வந்து, ‘கோமல்’ ரோடில் திரும்பிச் சென்றால் மூவலூரையடுத்துத் திருஅழுந்தூர் வருகிறது. (2) கும்பகோணம், மயிலாடுதுறையிலிருந்து நகரப்பேருந்து செல்கிறது. கோயிலிலேயே இறங்கலாம். (3) குத்தாலத்திலிருந்தும் வரலாம்; பேருந்துகள் உள்ளன. இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப் பாதையில் உள்ள நிலையம். ஊரின் தொடக்கத்திலேயே - ‘கம்பர் நினைவாலயம் என்னும் பெயர்ப்பலகையுள்ள இடத்தில் இடப்பக்கமாகத் திரும்பினால் வீதியின் கோடியில் திருக்கோயில் உள்ளது. வலப்புறமாகத் திரும்பிச் சென்றால் அவ்வீதியின் கோடியில் ஆமருவியப்பன் ஆலயமும் அதற்கு முன்பாகவே கம்பர் நினைவு மண்டபமும் உள்ளன. (கம்பர் கோட்டம்) இத்தலம் சைவம் வைணவம் இரண்டிற்கும் சிறப்புடையது. கம்பர் அவதரித்த ஊர். அவர் வாழ்ந்த இடம் ‘கம்பர்மேடு’ என்று வழங்கப்படுகிறது. இவ்விடம் தொல் பொருள் ஆய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ளது. அகத்தியர் இங்கு இறைவனை வழிபடுங்கால் அஃதையறியாத மன்னன் ஒருவன் வானவெளியில் செலுத்திச் சென்ற தேரானது, இவ்விடத்தில் அழுந்திய காரணத்தால் இத்தலம் தேர் - அழுந்தூர் = தேரழுந்தூர் என்று பெயர் பெற்றதாகச் சொல்கின்றனர். தமிழ்ச் சான்றோரான இரும்பிடர்த் தலையார் வாழ்ந்த தலம். வேதங்கள், தேவர்கள், திசைப்பாலகர்கள் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது. ‘சந்தனவனம்’ என்றும் இதற்குப் பெயர். இறைவன் - வேதபுரீஸ்வரர், அத்யாபகேசர் இறைவி - சௌந்தரநாயகி தலமரம் - சந்தனம் தீர்த்தம் - வேதாமிர்த தீர்த்தம். விநாயகர் - ஞானசம்பந்த விநாயகர் சம்பந்தர் பாடல் பெற்றது. கோயில் அழகாகவுள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் பொலிவோடு விளங்குகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி. உள்ளே சென்றால் விசாலமான இடம். இடப்பால் ஸ்ரீ மடேஸ்வரர் ஆலயம். |