பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 511


வலப்பால் அம்பாள் சந்நிதி. அம்பாள் சுவாமி நோக்கியவாறு தரிசனம்
தருகின்றாள். உட்பிராகாரத்தில் சுப்பிரமணியர், நவக்கிரகம் க்ஷேத்ர லிங்கம்,
கடம்பவனேஸ்வரர் முதலாகவுள்ள சிவலிங்க மூர்த்தங்கள், வலஞ்சுழி
விநாயகர் சந்நிதிகள் உள்ளன. வலம் முடித்து உள்மண்டபத்துள் சென்றால்
தலப்பதிகக் கல்வெட்டுள்ளது. மண்டபத்தின் மேற்புறத்தில் திசைப்
பாலகர்களின் வண்ண ஓவியங்கள் உள்ளன. சுதையாலான துவார
பாலகர்கள். நேரே மூலவர் தரிசனம்.

     சித்திரையில் பெருவிழா. ஏனைய சிறப்பு விழாக்கள்:- ஆனித்திரு
மஞ்சனம், நவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகைச் சோமவாரங்கள், ஆருத்ரா
முதலியன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தென்முகக் கடவுள்,
லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். நாடொறும் நான்கு
கால வழிபாடு. காவிரித்தாய்க்கும் அகத்தியருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.
மாசியில் நடைபெறும் புனவர்சு விழா சிறப்பானது. பக்கத்தில் உள்ள தலங்கள்
குத்தாலம், ஆடுதுறை, மூவலூர் (வைப்புத்தலம்) முதலியன. மூன்றாம்
குலோத்துங்க சோழன் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

    இக்கல்வெட்டுக்களில் இத்தலம் “ஜயங்கொண்ட சோழவள நாட்டுத்
திருவழுந்தூர்” என்றும்; இறைவனின் திருப்பெயர் “திருவழுந்தூர் உடையார்”
என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டிலிருந்து சுவாமிக்கு நாடொறும்
காவிரியிலிருந்து திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு வருவதற்குக் கட்டளை
வைத்துள்ள செய்தி தெரியவருகின்றது. 23.6.1999ல் கும்பாபிஷேகம்
நடைபெற்றுள்ளது. இங்குள்ள சௌந்தரநாயகி வழிபாட்டு மன்றம் சிறந்த
பணிகளைச் செய்து வருகிறது.

    “தொழுமாறு வல்லார் துயர் தீர நினைந்(து)
     எழுமாறு வல்லார் இசைபாட விம்மி
     அழுமாறு வல்லார் அழுந்தை மறையோர்
     வழிபாடு செய்மாமட மன்னினையே.”     (சம்பந்தர்)

     “கம்பன் பிறந்தஊர் காவேரி தங்கும் ஊர்
      கும்பமுனி சாபம் குலைந்தவூர் - செம்பதுமத்
      தாதகத்து நான்முகனும் தந்தையும் தேடிக்காணா
      ஓதகத்தார் வாழும் அழுந்தூர்.”       (தனிப்பாடல்)