பக்கம் எண் :

518 திருமுறைத்தலங்கள்


158/41. திருப்பறியலூர்

(கீழப்) பரசலூர்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் வழக்கில் கீழப் பரசலூர் என்று வழங்குகின்றது.

     வீரட்டேஸ்வரர் கோயில் என்று கேட்டால்தான் மக்கள் எளிதில்
புரிந்து கொள்கிறார்கள். மயிலாடுதுறை - தரங்கம்பாடி பாதையில்
‘செம்பொன்னார் கோயிலை அடைந்து, அவ்வூர் மெயின் ரோட்டில்
நல்லாடை’ என்று கைகாட்டி காட்டும் பாதையில் (வலப்புறமாக) சிறிது தூரம்
 சென்று, ‘பரசலூர்’ என்று கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில்
(வலப்புறமாக) திரும்பி 2 கி.மீ. செல்லவேண்டும். இப்பாதை ஒரு வழிப்பாதை
- குறுகலானது. இதன் வழியே சென்றால் கோயிலை அடையலாம். கோயில்
சாலையோரத்தில் உள்ளது.

     அட்ட வீரட்டத்தலங்களுள் ஒன்று. வீரபத்திரை ஏவித் தக்கனைச்
சம்ஹரித்த தலம். தருமையாதீனத் திருக்கோயில்.

     தக்கன் யாகம் செய்த தலமாதலின் தக்ஷபுரம் என்றும்; தேவர்களுக்கு
ஏற்பட்ட பாவத்தைத் தண்டனைமூலம் பறித்ததால் ‘பறியலூர்’ என்றும்
பெயர்களுண்டு.

     இறைவன் - வீரட்டேஸ்வரர், தக்ஷபுரீஸ்வரர்.
     இறைவி - இளங் கொம்பனையாள்.
     தலமரம் - வில்வம். (பலா என்றும் குறிப்பிடப்படுகின்றது.)
     தீர்த்தம் - உத்தரவேதி தீர்த்தம். கோயிலின் பக்கத்தில் உள்ளது.

     சம்பந்தர் பாடியது.

     சிறிய கிராமம். பழைமையான கோயில். மேற்கு நோக்கியது. ராஜ
கோபுரம் இல்லை. முன்னால் இரும்புப்பந்தல் போடப்பட்டுள்ளது. கோயில்
எதிரில் சாலையில் (மறுபுறத்தில்) விநாயகர் கோயில் உள்ளது. கொடிமரம்
இல்லை. நந்தி, பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகர் உள்ளார். இங்கிருந்து
பார்த்தாலே மூலவர் சந்நிதி தெரிகின்றது. வலம் வந்து உள் பிராகாரம்
நுழைந்தால் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன.