பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 519


     கோஷ்ட மூர்த்தங்களாகத் துர்க்கை, பிரம்மா, லிங்கோற்பவர்,
தட்சிணாமூர்த்தி, நர்த்தனவிநாயகர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.
சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. கருவறைச் சுவரில், தக்கன் சிவலிங்கத்தைப்
பூசிக்கும் சிற்பம் உள்ளது. விநாயகரையும், நால்வரையும் வணங்கி, உள்
நுழைந்து மண்டபத்தில் இடப்பால் உள்ள தக்ஷ சம்ஹார மூர்த்தியைத்
தரிசிக்கலாம். எதிரில் சாளரவாயில் உள்ளது. சூலம், தண்டு, வாள், மணி,
கபாலம் வாள் முதலியன ஏந்திய ஆறு திருக்கரங்களுடன் இம்மூர்த்தி
(உற்சவத்திருமேனி) காட்சி தருகின்றார். கீழே செப்புத் தட்டில் தக்கன் யாகம்
செய்வது போலவும் பிரமன் இருப்பது போலவும் சிற்பம் உள்ளது.

     இம்மூர்த்தியின் திருவடியில் தக்கன் வீழ்ந்து கிடப்பதைப்போன்று
சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதைத் தகட்டால் மூடிவைத்துள்ளனர்.
சிவாசாரியரிடம் கேட்டு, அத்தகட்டைத் தள்ளச் செய்து, இச்சிற்பத்தைக்
கண்டு தரிசிக்கலாம். சம்ஹாரமூர்த்திக்குப் பக்கத்தில் நடராச சபையுள்ளது.
மூலவர் பெரிய திருமேனி - சுயம்பு - சதுர ஆவுடையார். கோமுகம்
மாறியுள்ளது. மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் மயில்மீது ஒரு காலூன்றி நிற்கும் முருகன், சோமாஸ்கந்தர்,
விநாயகர், பிரதோஷ நாயகர் முதலியன சிறப்பாகவுள்ளன.

     கார்த்திகை ஞாயிறு நாள்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீ லஸ்ரீ வேலப்ப தேசிக
வாமிகள் அருளிச் செய்துள்ள தலபுராணம் உள்ளது. சுந்தரபாண்டியன்
ஆட்சிக்காலக் கல்வெட்டில் இத்தலம் “ஜயங்கொண்ட சோழவளநாட்டு
வீழைநாட்டு ராஜ நாராயண சதுர்வேதி மங்கலமான பறியலூர்” என்று
குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் ‘திருவீரட்டான முடையார்’, ‘தக்ஷேஸ்வர
முடையார்’ என்று குறிக்கப் பெற்றுள்ளார்.

     
“விளங்கொள் மலர்மேல் அயன் ஓதவண்ணன்
     துளங்கும் மனத்தார் தொழத் தழலாய் நின்றான்
     இளங் கொம்பனாளோடு இணைந்தும் பிணைந்தும்
     விளங்கும் திருப் பறியல் வீரட்டத்தானே.”       (சம்பந்தர்)