பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 521


     கோயில் அழகுறச் சோலை நடுவே அமைந்துள்ளது. நெடுஞ்சாலையில்
அமைக்கப்பட்டுள்ள தேவஸ்தான வளைவை (Arch)ப் பின்பற்றிச் சென்றால்
கோயிலை அடையலாம். கிழக்கு நோக்கிய ஆலயம். கோயிலுக்குப் பக்கத்தில்
தீர்த்தம் உளது. இத்தலம் தாக்ஷாயணிக்கு அருள்புரிந்ததும், வீரபத்திரர்
தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.

     இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்றும் பெயருண்டு. இந்திரன் நீராடி
வழிபட்டு விருத்திராசுரனைக் கொல்ல வச்சிராயுதம் பெற்ற தலம். இதனால்
இந்திரபுரி என்றும் பெயர். கந்தபுரி என்ற பெயருமுள்ளது.

     கிழக்கு நோக்கிய திருவாயில். கோச்செங்கட்சோழன் திருப்பணி. கீழே
பதினாறும் மேலே பதினாறும் இதழ்களையுடைய தாமரை போன்ற
ஆவுடையில் மூலவர் - இலிங்கத் திருமேனி - சுயம்பு மூர்த்தமாகக் காட்சி
தருகிறார். வட்டவடிவமான ஆவுடையார் உள்ள திருமேனி திருமாலாலும்,
சதுர வடிவுடைய ஆவுடையாருள்ள திருமேனி பிரமனாலும்
பூசிக்கப்பட்டதாகும்.

     அர்த்த மண்டபத்தில் துவாரபாலகர்கள் உளர். ஸ்தபன மண்டபத்தில்
சோமாஸ்கந்தர், நடராஜர், சந்திரசேகர் முதலிய உற்சவத் திருமேனிகள்
உள்ளன. இங்குள்ள பிட்சாடனத் திருக்கோலம் மிகப்பழைமையானது.
மகாமண்டபத்தில் விநாயகர், சூரிய சந்திர லிங்கங்கள், சுப்பிரமணியர்
சந்நிதிகள் உள்ளன. தெற்குச்சுவரில் துறவி ஒருவரோடும் அமைச்சர்
ஒருவரோடும் நின்று வழிபடும் அரசனின் உருவம் உள்ளது.

     தேவி சந்நிதி தனியே உள்ளது. தெற்கு நோக்கிய சந்நிதி.
இத்தலத்திற்கு தென்மேற்கேயுள்ள பறியலூரில் தந்தையான தக்கன் செய்த
வேள்விக்குச் செல்லும் கோலத்தில் மேற்கு நோக்கியிருப்பதாகச் செவிவழிச்
செய்தி சொல்லப்படுகிறது. அம்பிகைக்கு ஆலயத்தின் தென்மேற்கில்
சப்தகன்னிகையர் கோயில் உள்ளது. மேற்கில் தலவிநாயகர் - பிரகாசப்
பிள்ளையார் உள்ளார். மற்றும் வனதுர்க்கை, விசுவநாதர், சீனிவாசப்
பெருமாள், சிபிகாட்சிநாதர் எனப்படும் மான்மழுவேந்திய சிவபெருமான்,
உருத்திராக்கமாலையும் சக்தி ஆயுதம் தரித்த நான்கு கைகளையுடைய
பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி, ஜோஷ்டாதேவி, வீரபத்ரர், சூரியர், பைரவர்
முதலிய மூர்த்தங்களும் ஆலயத்தில் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்கள்: இந்திர
கணபதி, தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், துர்க்கை, சித்திரை மாதம்
7ஆம் நாள் முதல் 18ஆம் நாள் முடிய சூரிய ஒளி சுவாமிமீது படுபவதாகச்