சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் ‘புஞ்சை’ என்று வழங்குகின்றனர். மயிலாடுதுறையிலிருந்து செல்லலாம். அடிக்கடி பேருந்து செல்கிறது. செம்பொனார் கோயிலுக்கு அருகில் உள்ளது. சம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் அவதரித்த பதி. சம்பந்தர், தன் தந்தையார் தோளிலிருந்து இத்தலப்பதிகத்தை அருளினார் என்பது வரலாறு. இதை அத்தலப்பதிகத்தில் கடைசி பாடலால் அறிகிறோம். பாலையாக இருந்த இவ்வூரை நெய்தல் நிலமாக மாறுமாறு பாடியருளியதாகவும்; நெய்தலைப் பின்னும் கானகமும் வயலுமாக ஆக்கியருளினார் என்பர். இறைவன் - நற்றுணையப்பர் இறைவி - பர்வதபுத்திரி தீர்த்தம் - சொர்ணதீர்த்தம். மூவர் பாடல் பெற்றது. கிழக்கு நோக்கிய கோயில். இக்கோயில் கருவறை அழகான வேலைப்பாடுடையது. கோயிலருகில் தீர்த்தமுள்ளது. கோபுர வாயிலில் பஞ்சமூர்த்திகள் கதைசிற்பங்கள் உள்ளன. அம்பாள் சந்நிதி மேற்கு நோக்கியுள்ளது. நால்வர், விநாயகர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. மகாமண்டபத்தில் நடராசசபை உள்ளது. அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலங் காட்டிய கல்யாண சுந்தரேசர் கோயில் உள்ளது. சுவாமி கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார். கோஷ்ட மூர்த்தங்களாக அகத்தியர், விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சோழர் காலக்கல்வெட்டில் இத்தலம் “ஜயங்கொண்ட வளநாட்டு ஆக்கூர் நாட்டுப்பிரமதேயமாகிய நனிபள்ளி” என்று குறிக்கப்படுகிறது. “கடல்வரை ஓதமல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருதப் படுபொருளாறு நாலுமுள தாக வைத்த பதியான ஞான முனிவன் இடுபறை யொன்ற அத்தர் பியன் மேலிருந்(து) இன் இசையால் உரைத்த பனுவல் நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணைநமதே.” (சம்பந்தர்) |