கோச் செங்கட்சோழனின் திருப்பணி பெற்ற மாடக்கோயில். சிறப்புலி நாயனார் அவதரித்த பதி. கபிலதேவநாயனார் 11ஆம் திருமுறையில் இத்தலத்தைப் பாடியுள்ளார். இறைவன் - தான்தோன்றீஸ்வரர், சுயம்புநாதர். இறைவி - கடகநேத்ரி, வாள் நெடுங்கண்ணி. தீர்த்தம் - குமுத தீர்த்தம். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கோபுரவாயிலில் விநாயகர் காட்சி தருகிறார். அகத்தியருக்குத் திருமணக் காட்சி தந்த தலங்களுள் இதுவும் ஒன்றாதலின் சுவாமிக்கு வலப்பால் கிழக்கு நோக்கி அம்பாள் சந்நிதி உள்ளது. படிகளேறி மேலே சென்றால் உள்சுற்றில் பாணலிங்கம், விசுவநாதர் விசாலாட்சி, சிறப்புலி நாயனார், நால்வர், விநாயகர், முருகன், இலக்குமி ஆகிய சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள மூர்த்தி “ஆயிரத்துள் ஒருவர்” என்று வழங்கப்படுபவர். இவரே இத்தலத்திற்குரிய சிறப்பு மூர்த்தி யாவார். இச்சந்நிதி தனி விமானத்துடன் காட்சி தருகிறது. “மன்னன் ஒருவன் இறைவன் கட்டளைப்படி நாடொறும் ஆயிரம் அந்தணர்களுக்கு உணவளித்து வந்தான். இறைவனும் அவர்களுள் ஒருவராக வந்து உணவுண்டு அம்மன்னனுக்கு அருள் புரிந்தார். ஆகவே இம்மூர்த்தி ஆயிரத்துள் ஒருவர் என்று போற்றப்படுகின்றார்.” கோஷ்ட மூர்த்தங்கள் முறையாகவுள்ளன. இரண்டாம் இராசாதிராசன், கோப்பெருஞ்சிங்கப்பல்லவன், வீரகிருஷ்ண தேவராயர் முதலியோர் காலத்திய கல்வெட்டுக்கள் இத்தலத்திற்கு உள்ளன. அருகில் உள்ள தலம் “செம்பொன்னார்கோயில்” ஆகும். இத்தலத்துப் பதிகத்தில் வேளாளரைச் சிறப்பித்து ஞான சம்பந்தர் பாடியுள்ளார். “வாளார்கண் செந்துவர் வாய் மாமலையான்றன் மடந்தை தோளாகம் பாகமாப் புல்கினான் தொல் கோயில் வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே” (சம்பந்தர்) |