அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி, துர்க்கை வழிபட்ட தலம். பிரமனுக்கு உபதேசம் செய்த இடம். குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் ஆகியோர் வாழ்ந்து, தொண்டாற்றி முக்தியடைந்த தலம். உள்ளமுருகப் பாராயணம் செய்யப்படும் அபிராமி அந்தாதி பாடப்பட்ட அற்புதப் பதி. அன்னை அபிராமியின் அருள் தலம். யமபயம் போக்கவல்ல பதி. மிகப்பெரிய கோயில். தருமையாதீனத் திருக்கோயில். இறைவன் - அமிர்தகடேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர் இறைவி - அபிராமி தலமரம் - வில்வம், ஜாதி (பிஞ்சிலம்) தீர்த்தம் - அமிர்த தீர்த்தம், சிவகங்கை. மூவர் பாடல் பெற்றது. இங்குள்ள காலசம்ஹாரமூர்த்தி - காலனை சம்ஹரித்த மூர்த்தி - மிகப்பெரிய மூர்த்தி - கம்பீரமான தோற்றம் - திருமேனியில், எமன் வீசிய பாசத்தின் தழும்பு உள்ளது. பிள்ளையார் - கள்ளவாரணப் பிள்ளையார். மார்க்கண்டேயர் இறையருள் பெற வழிபட்ட 108 தலங்களுள் இது 108- ஆவது தலமாகும். (107-ஆவது தலம் திருக்கடவூர் மயானம்) மார்க்கண்டேயர் கங்கை நீருடன் பிஞ்சிலப் புஷ்பங்களையும் கொண்டு வந்து அர்ச்சித்ததாக வரலாறு. இச்செடி (பிஞ்சிலம்) கோயிலுள் உள்ளது. இதனால் இத்தலத்திற்குப் ‘பிஞ்சிலாரண்யம்’ என்றும் பெயர். தற்போது தலமரம் இதுவே. ஆதியில் தலவிருட்சம் வில்வம் என்பர். சுவாமிக்கு நாடொறும் அபிஷேகத்திற்குரிய நீர் திருக்கடவூர் மயானத்திலிருந்து கொண்டு வரப்படுகிறது. (இது பற்றிய விளக்கத்தைத் திருக்கடவூர் மயானத் தலக்குறிப்பில் காண்க) (மிருகண்டு முனிவரின் அவதாரத் தலம் மணல்மேடு ஆகும்.) பூமிதேவி அனுக்ரஹம் பெற்ற தலம். ம்ருத்யுஞ்சஹோமம். உக்ரக சாந்தி, பீமரதசாந்தி, சஷ்டியப்த பூர்த்தி (மணிவிழா), சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் முதலியவை செய்வதற்குரிய சிறப்புடைய தலம் இதுவேயாகும். இச்சாந்திகளை வேறு தலத்தில் செய்ய நேர்ந்தாலும் இம்மூர்த்தியை நினைத்துத்தான் செய்ய வேண்டும். இத்திருக்கோயிலில் நவக்கிரக சந்நிதி இல்லை. அளப்பரிய சிறப்புக்களுடன் அருமையாகத் திகழும் இத்திருக்கோயில் எழுநிலைகளுடைய ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. |