பக்கம் எண் :

534 திருமுறைத்தலங்கள்


     ராஜகோபுரத்தில் உள்ள அரிய சிற்பங்களுள் பாற்கடலைக் கடைந்தது.
கஜசம்ஹாரமூர்த்தி, சிவபாத இருதயரின் தோளில் சம்பந்தர், சம்பந்தரின்
சிவிகையை அப்பர் தாங்குவது முதலியன கண்டு மகிழத்தக்கவை.

     உள்கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கவசமிட்ட கொடிமரம்,
கொடிமரத்து விநாயகர் தரிசனம். பலிபீடம். இதைச் சுற்றி நான்கு சிறிய
சந்நிதிகள் உள்ளன. கோபுர வாயில் நுழைந்து பிராகாரத்தில் வலம்
வரும்போது மார்க்கண்டேஸ்வரர், நாகநாதேஸ்வரர், சுப்பிரமணியர்,
கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் நடராசசபை உள்ளது. பக்கத்தில்
வரிசையகாப் பாற்கடல் கடைந்தது, மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்தது
முதலான வரலாறுகள் ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன.

     அடுத்து ‘பஞ்சலிங்கங்கள்’ சந்தானாசாரியர்கள், குங்கிலியக்கலய
நாயனார், சந்திரபூஷணராஜா, அமைச்சர், குங்கிலியம் கொண்டுவந்த வணிகர்,
வீரபத்திரர், பிராமி முதலான அம்பிகைகளின் திருமேனிகள், அசுவினி தேவர்
முதலானோரின் சந்நிதிகள் வரிசையாகவுள்ளன. இங்குத் தலமரமாகிய
‘பிஞ்சிலம்’ செடி உள்ளது. பக்கத்தில் தர்மராஜா (எமன்) உற்சவத் திருமேனி-
சந்நிதி உள்ளது. தொடர்ந்து அறுபத்து மூவர் திருமேனிகள் உள்ளன.
சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், உற்சவமூர்த்தி, பள்ளியறை இவற்றைக் கண்டு
தொழுதவாறே, வாயிற்படிகளேறிச் சென்றால் மண்டபத்தை அடையலாம்.
இங்கு உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

     சந்திரசேகரரைத் தொழுது வாயிலைக் கடந்தால் நேரே மூலவர்
தரிசனம். இடப்பால் காலசம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் காட்சி
தருகிறார். காலசம்ஹாரமூர்த்தி - அற்புதமான திருமேனி. மேலே
வெள்ளிப்பிரபை, பக்கத்தில் உள்ள வெள்ளிப்பேழையில் ‘உடையவர்’
மரகதலிங்கம் உள்ளது. நாடொறும் காலசந்தி, சாயரட்சை வழிபாடு இதற்கு
நடைபெறுகின்றது.

     இம்மூர்த்தியின் திருவடிக்கீழ் மார்க்கண்டேயர் கைகூப்பிய நிலையில்
இருப்பது, எமன் உதைபெற்றுக் கீழே வீழ்ந்து கிடப்பது ஆகிய காட்சி -
பீடத்தினடியில் வெள்ளித் தகட்டால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
தீபாராதனைக் காலத்தில் இதைத் தரிசிக்கலாம்.

     பூமிதேவி பிரார்த்திக்க, மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் வேண்ட
இறைவன், எமனை (தர்மராஜா) எழுப்பித் தந்தருளினாராதலின்,