அநுக்ரஹம் பெற்ற (எழுப்பப்பெற்ற) தர்மராஜா - எமனின் திருவுருவம் இம்மூர்த்திக்கு நேர் எதிரில் உள்ளதைக் காணலாம். கன்றிய காலனைக் காலாற்கடிந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டில் 11 விசேஷ காலங்களில் (சித்திரைவிஷு , பெருவிழாவில் 5,6-ஆம் நாள்கள், பிராயசித்த அபிஷேகம், தக்ஷிணாயன புண்ணிய காலம், ஆனி உத்திரம், புரட்டாசியில் கன்யாசதுர்த்தி, துலாவிஷு ஆருத்ரா, உத்தராயண புண்ணிய காலம், மாசி மகம் கும்பசதுர்த்தி) அபிஷேகம் நடைபெறுகின்றது. மூலவர் மேற்கு நோக்கிய சந்நிதி. அற்புதமான அழகுத் திருமேனி. மனநிறைவான தரிசனம். சித்திரையில் பெருவிழா பதினெட்டு நாள்கள் நடைபெறுகிறது. கார்த்திகைச் சோமவார 1008 சங்காபிஷேகம் சிறப்பாகக் கொண்டு தரிசிக்கத் தக்கது. மாதாந்திர விசேஷகால பூஜைகளும் வழக்கம் போல நடைபெறுகின்றன. சோம வாரங்களில் சுவாமிக்கும், அமாவாசை பௌர்ணமி நாள்களில் அம்பாளுக்கும், சனிக்கிழமைகளில் காலசம்ஹார மூர்த்திக்கும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. ‘அபிராமி’ - பெயரிலும் அழகு ; வடிவிலும் அழகு. அழகுருவாய - அம்பிகை. ரம்யம் - அழகு. ரம்யத்தை உடையவள் - ராமி (அழகுடையவள்). அபி - மேலான. எனவே ‘அபிராமி’ என்ற சொல்லுக்கு ‘மேலான அழகுடையவள்’ என்பது பொருள். தன்னையே துதித்து, தன் பெயரையே பெயராக்கிக் கொண்ட பக்தன் ஒருவனுக்கு அருள்புரிந்த - அபிராமிபட்டருக் கருள் செய்த - அதன் வழிஉலகுக்கு அபிராமி அந்தாதி கிடைக்கச் செய்த அபிராமி சந்நிதியில் நின்று அப்பெருமாட்டியைத் தரிசிப்பதே ஒருவகை ரம்யந்தான். வௌவால் நெத்தி மண்டபம். முன்னால், சுதையில் துவார பாலகியர் உருவங்கள், அபிராமி அந்தாதிப் பாடல்கள் கல்லிற் பொறித்துப் பதிக்கப் பட்டுள்ளன. வாயில் கடந்து உட்சென்று அம்பிகைமுன் நிற்கும்போது நம்மையே மறக்கின்றோம். நின்ற திருக்கோலம். வலப்பால் உற்சவத் திருமேனி. அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். வெள்ளிக் கவசத்தில் ஒளிரும் ஒண்கொடி கண்ணுக்குப் பெரு விருந்தாகிறாள். ‘அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியை’ உளமாரத் துதித்து வேண்டுகிறோம். அம்பாள் சந்நிதியை வலம்வர வசதியுள்ளது. |