பக்கம் எண் :

538 திருமுறைத்தலங்கள்


     மூவர் பாடல் பெற்ற தலம்.

     இத் தீர்த்தத்திலிருந்துதான் நாடொறும் திருக்கடவூர்ப் பெருமானுக்குத்
திருமஞ்சனத்திற்குத் தண்ணீர் கொண்டு வரப்படுகின்றது. ராஜகோபுரமில்லை.
முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடம் மட்டும்
உள்ளது. விசாலமான உள்ளிடம். உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது.
வாயிலுள் நுழைந்து வலமாக வரும்போது நடராசசபையும், மறுகோடியில்
பைரவர் சந்நிதியும் உள்ளன. வில்வமரம் உள்ளது. விநாயகரை வணங்கி
வாயிலைக் கடந்து உள்மண்டபத்தினை யடைந்தால் இடப்பால் வள்ளி
தெய்வயானையுடன் சிங்காரவேலர், வில்லேந்திய கோலத்தில் தரிசனம்
தருகின்றார்.

     சிங்காரவேலர் சந்நிதியில் எதிரில் மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரு
ராசிகளும் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. இவை அழிந்த நிலையிலுள்ளன.
நேரே பார்த்தால் மூலவர் தரிசனம். பழைமையான மூர்த்தி. சதுர
ஆவுடையார் மேற்கு நோக்கியது. தரிசிக்கும்போது தக்க பராமரிப்பு
இன்மையை உணர்ந்து உள்ளம் துன்புறுகின்றது. கோஷ்ட மூர்த்தங்களாகத்
துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், அர்த்தநாரீசுவரர்,
கல்யாணசுந்தரர் முதலிய மூர்த்தங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

      “கடவூர் தீர்த்தக்கிணறு” எனப்படும் “காசி தீர்த்தம்” கோயிலுக்குப்
பக்கத்தில் - தென்புறத்தில், சற்றுத் தொலைவில் வயல்களின் மத்தியில்
நாற்புறச் சுவர்கள்சூழ நடுவில் கிணறு வடிவில் உள்ளது. இங்கிருந்து
கடவூருக்குத் தண்ணீர் வண்டியில் கொண்டு போகப்படுகிறது.
மார்க்கண்டேயருக்காக, பங்குனிமாதம், அசுவினி நட்சத்திரத்தில்
கங்கையானது, இத்தீர்த்தமாக வந்ததாக வரலாறு. ஆதலின் இத்தீர்த்தம்
‘அசுவினி தீர்த்தம்’ எனவும் வழங்கப்படுகின்றது. இந்த ஐதீகப்படி, பங்குனி
அசுவினி நாளில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது.

    சுவாமியின் கருவறையுள் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து
வைக்கப்பட்டுள்ளன. சஷ்டிவிழா சிறப்பாக நடைபெறுகிறது. தலப்பதிகம்
சலவைக் கல்லிற் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது. அம்பாள் கோயில்
எதிரில் உள்ளது. கிழக்கு நோக்கியது. மூன்று நிலைகளையுடைய
முன்கோபுரம் உள்ளது. துவாரபாலகியர் உருவங்கள் சிதைந்துள்ளன.
அம்பாள் நின்ற கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள்.