சோழநாட்டு (தென்கரை)த் தலம். திருநள்ளாற்றிலிருந்து காரைக்கால் செல்லும் பேருந்துச்சாலையில் 2 கி.மீ. சென்று, வலப்பால் மாதாகோயில் (Church) உள்ள இடத்தில், வலப்புறமாகப் பிரியும் பாதையில் சென்றால் கோயிலையடையலாம். பாதையில் சாலை பிரியுமிடத்தில் பெயர்ப் பலகையும் உள்ளது. கோயில்வரை வாகனங்களில் செல்லலாம். தருமையாதீனக் கோயில். கோயிலைச் சுற்றிலும் தென்னை மரங்கள். மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது. திருஞான சம்பந்தரின் யாழ்முரிப் பதிகம் பெற்ற சிறப்புடையது. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலம். இத்தலத்தில்தான் திருஞான சம்பந்தரின் இசை, திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழிசையில் அடங்காமையை இறைவன் வெளிப்படுத்தினார். (முரி = ஒருவகை இசைப் பாடல். யாழில் அமைத்துப் பாடும் இசையமைப்பாதலின் ‘யாழ்முரி’ எனப் பெயர் பெற்றது.) நான்முகன் வழிபட்ட பதி. இதற்கு அண்மையில் ‘தக்களூர்’ என்னும் வைப்புத் தலமுள்ளது. சிறிய ஊர். கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதி. முகப்பு வாயில் உள்ளது. இறைவன் - தருமபுரீஸ்வரர், யாழ்முரிநாதர் இறைவி - மதுரமின்னம்மை, தேனமிர்தவல்லி. தலமரம் - வாழை. தீர்த்தம் - தருமதீர்த்தம், பிரமதீர்த்தம் சம்பந்தர் பாடல் பெற்றது. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம் - நந்தி வலப்பால் அம்பாள் சந்நிதி. மண்டபத்தூணிலேயே துவார விநாயகரும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். அம்பாள் நின்ற திருக்கோலம் - சதுர்ப்புஜ நாயகி. சுவாமி சந்நிதி முகப்பு வாயில் மேலே நடுவில் ரிஷபாரூடரும், ஒருபுறம் சம்பந்தர் பாட, யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி பக்கத்தில் நிற்பது போலவும், மறுபுறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அவர் மனைவி ஆகியோருடன் நிற்பது போலவும் சுதை வேலைப்பாடுகள் உள்ளன. |