பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 549


     அவன் மனைவி, கணக்கன் ஆகியோர் உருவங்கள் உள்ளன.
இதுப்பற்றிச் சொல்லப்படும் தலவரலாற்றுச் செய்தியாவது :-

     “இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படிக் கோயிலுக்குப் பால்
அளந்து கொடுத்து வந்தான். கணக்கன் அப்பாலைத் தன் வீட்டுக்கு
அனுப்பிப் பொய்க் கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான்.
செய்தியறிந்த மன்னன் கோபம் கொண்டான். அப்போது இறைவன்,
இடையனைக் காக்கவும் கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணித் தம் சூலத்தை
ஏவினார். அச்சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலுள் பலிபீடம் சற்று
விலகியுள்ளது. சூலம் கணக்கன் தலையைக் கொய்தது - இடையனுக்கு
இறைவன் காட்சி தந்து அருள் புரிந்தார்.”

     விசாலமான பிராகாரம். உயர்ந்த சுற்றுமதில். சுவரில் நளன் வரலாறு
வண்ண ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபம் உள்ளது.
கோபுரவாயிலின் வடபால் ‘சனிபகவான்’ சந்நிதி உள்ளது. மகர,
கும்பராசிகளுக்குச் சனி, அதிபதியாதலின் முன்னால் மகர, கும்பராசிகளின்
உருவங்கள் உள்ளன. இத்தலத்தில் பிரதானம் இப்பகவானுக்கே.
சனிபகவானுக்குத் தங்கத்தாலான காகவாகனமும் தங்கக் கவசமும் உள்ளது.
சனிதோஷமுள்ளவர்கள் நெய்தீபம் ஏற்றும் பிரார்த்தனை இங்கு விசேஷம்.
அதையடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம்.

     உற்சுற்றில் சுந்தரர், அறுபத்துமூவர் மூல உருவங்கள் உள்ளன. வரிசை
முடிவில் நளன் வழிபட்ட நளேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது. கோஷ்ட
மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், பிரமனும் துர்க்கையும்
உள்ளனர்.

     சொர்ண கணபதி சந்நிதி தலவிநாயகர் சந்நிதியாகும். சப்தவிடங்கத்
தலசிவலிங்கத் திருமேனிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், ஆதிசேஷன்,
நளநாராயணப் பெருமாள், மகாலட்சுமி, பைரவர் முதலிய சந்நிதிகளும்
உள்ளன. நடராசா அழகு. படிகளேறிச் செல்லும்போது பலிபீடம் சற்று
விலகியிருப்பதைக் காணலாம். உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து
வைக்கப்பட்டுள்ளன.

     மூலவர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு. (மூலவர் தர்ப்பையில்
முளைத்த சுயம்புமூர்த்தி. சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்புள்ளது.)
பக்கத்தில் உன்மத்த நடன தியாகேசர் தரிசனம். (நகவிடங்கத் தியாகர்) தேவி
நீலோத்பலாம்பாள். இச்சந்நிதியில் செய்யப்படும் மரகதலிங்க வழிபாட்டுச்
சிறப்பைக் காணப் பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.