பக்கம் எண் :

550 திருமுறைத்தலங்கள்


     நாடொறும் ஆறுகால வழிபாடுகளும் செம்மையாக நடைபெறும்
இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் அருளாட்சிக்குட்பட்டதாகும்.
வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது.

     நளதீர்த்தம் கோயிலுக்குச் சற்று தள்ளி உள்ளது. இத்தலத்திற்கு வரும்
மக்கள் எண்ணெய் தேய்த்து இதில் நீராடுகின்றனர். இத்தீர்த்தத்திற்குச்
செல்லும் வழி தெளிவாக வளைவின் (Arch) மூலம் காட்டப்பட்டுள்ளது. இதில்
நவக்கிரகங்களுக்கும் தனித் தனிக் கிணறுகள் உள்ளன. நளன் தோஷம் நீங்க
வழிபட்ட தலம். நவக்கிரக சந்நிதி இல்லை. கோயிலுக்கு எதிரில் சந்நிதி
வீதியில் தேவஸ்தானச் சுற்றுலா விடுதி உள்ளது. ஆதீன மடாலயம் தெற்கு
வீதியில் உள்ளது.

     கோயிலுள்ளும் பொது மண்டபம் உள்ளது. யாத்திரிகர்கள் இரவு தங்கிச்
செல்லலாம். தக்கபாதுகாப்பு உள்ளது. இத்தலபுராணம் சுப்பிரமணியக்
கவிராயரால் பாடப்பட்டுள்ளது. இத்தலத்திற்குப் பக்கத்தில் 2 கி.மீ.
தொலைவில் ‘தக்களூர்’ என்னும் வைப்புத்தலம் உள்ளது.  

     “போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன்னகலம்
     பாகமார்த்த பைங் கண் வெள்ளேற்றண்ணல் பரமேட்டி
     ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்
     நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.”     (சம்பந்தர்)

     “குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்
         குலவரையின் மடப்பாவை இடப் பாலானை
     மலங் கொடுத்து மாதீர்த்தம் ஆட்டிக்கொண்ட
         மறையவனைப் பிறைதவழ் செஞ்சடையினானைச்
     சலங் கொடுத்துத் தயாமூல தன்ம மென்னுந்
         தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க்கெல்லாம்
     நலங் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை
         நானடியேன் நினைக்கப்பெற்றுய்ந்த வாறே”   (அப்பர்)

     “மாதினுக்கு உடம்பு இடங் கொடுத்தானை
         மணியினைப் பணிவார் வினை கெடுக்கும்
     வேதனை வேதவேள் வி யர் வணங்கும்
         விமலனை அடியேற்கு எளி வந்த
     தூதனைத் தன்னைத் தோழமையருளித்          
         தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்
     நாதனை நள்ளாறனை அமுதை
         நாயினேன் மறந்தென் நினைக்கேனே.”      (சுந்தரர்)