பக்கம் எண் :

552 திருமுறைத்தலங்கள்


     இறைவன் - ஐராவதீஸ்வரர்
     இறைவி - சுகந்தகுந்தளாம்பிகை, வண்டமர் பூங்குழலி
     தலமரம் - பாரிஜாதம், தற்போது இல்லை.
     தீர்த்தம் - வாஞ்சியாறு, மற்றொன்றாகிய சூரிய தீர்த்தம்.

     கோயிலின் முன்பு உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்றது.

     பழைமையான கோயில், வெள்ளையானை (ஐராவதம்) வழிபட்ட தலம்.
இத்தலத் தேவாரத்தில்,

 “நின்று மேய்ந்து நினைந்து மாகரி நீரொடும் மலர்வேண்டி வான்மழை
  குன்றின் நேர்ந்து உகுத்திப் பணி செய்யும் கோட்டாறு”

     என வரும் தொடரால், வெள்ளை யானை வழிபட்ட தலம் என்னும்
குறிப்பு பெறப்படுகிறது. வெள்ளை யானை தன் கோட்டினால் மேகத்தை
இடித்து மழையை ஆறுபோலச் சொரிவித்து வழிபட்டதால் இத்தலம்
கோட்டாறு எனப் பெயர் பெற்றதென்பர்.

     கோடு - கரை. (வாஞ்சி) யாற்றின் கரையில் இருத்தலாலும் இப்பெயர்
பெற்றதென்பர். திருவிளையாடற்புராணத்துள் சொல்லப்படும் வரலாறாகிய
‘வெள்ளையானை சாபம் நீங்கியது’ தொடர்பாக : (வெள்ளையானை துர்வாச
முனிவரின் சாபப்படி காட்டானையாகிப் பல தலங்களுக்கும் சென்று இறைவன்
வழிபட்டு இறுதியில் மதுரையில் இறையருளால் பழைய வடிவம் பெற்றது.)
வெள்ளையானை (ஐராவதம்) சென்று வழிபட்ட பல தலங்களுள் இதுவும்
ஒன்று என்பர்.

     கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதி. உள்ளே நுழையும் நம்மை மூன்று
நிலைகள் கொண்ட ராஜகோபுரம் வரவேற்கின்றது. உள்ளே சென்றதும் நேரே
சுவாமி சந்நிதி தெரிகிறது. வலமாக வரும்போது விநாயகர் சந்நிதியுள்ளது.
விசாலமான வெளிச் சுற்று. நடராச சபைக்கான பக்க வாயில். கோஷ்ட
மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், பிரம்மா, விஷ்ணு உருவங்களும் உள.
பிராகாரத்தில் சுந்தரர், பரவையார், சுபமகரிஷி மூலத்திருமேனிகள் உள.
அடுத்து ஆறுமுகர், குமார புவனேஸ்வரர், அகத்தியர் முதலானோர்
வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். சுபமகரிஷியின் சிலையும், குமார
புவனேஸ்வரரின் உருவச்சிலையும் வெளிச்சுற்றில் பின்புறத்தில்
வைக்கப்பட்டுள்ளன. ஞானசம்பந்தரின் பதிகம் கல்லில் பொறிக்கப்
பட்டுள்ளது. மூலவர் மிகச் சிறியவர்.

     மூலவர் சந்நிதியில் முன்னால் தேன்கூடு உள்ளது. இக்கூடு
பல்லாண்டுக் காலமாக இருந்து வருகின்றது என்று சொல்கின்றனர்.