பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 557


     இடையில் சாலையோரத்தில் உள்ளது. அவ்விடத்தில் ஒரு மண்டபம்
இருக்கிறது. அவ்விடத்தை இன்று “பண்டார வாடை திருமாளம்” என்று
சொல்கின்றனர். இன்றும் சோமயாக உற்சவம் இவ்விடத்தில்தான்
நடைபெறுகிறது.

     யாகம் நடைபெறும் இடத்திற்கு, தியாகராசப் பெருமான் வெட்டியான்
வேடத்தில் (நீசவடிவினராய்) வருகை தந்தார். (நான்கு வேதங்களையும்
நான்கு நாய்களாக்கி உடன் பிடித்துக்கொண்டு, தோளில் இறந்துபோன
கன்றினைப் போட்டுக்கொண்டு, தடித்த பூணூலணிந்து, தலையில் முண்டாசு
(தலைப்பாகை) கட்டி, விநாயகரையும், சுப்பிரமணியையும் சிறுவர்களாக்கி,
உமாதேவியை வெட்டிச்சி வேடத்தில் தலையில் கள்குடம் ஏந்தியவாறு
அழைத்துக்கொண்டு) இக்கோலத்தில் வந்த இறைவனைப் பார்த்து,
எல்லோரும் அபசாரம் நேர்ந்து விட்டதென்று எண்ணியும், இக்கோலத்தைக்
கண்டு பயந்தும் ஓடினர். ஆனால் சோமாசிமாறரும் அவர் மனைவியாரும்
அவ்விடத்திலேயே அஞ்சி நிற்க, தந்தை வருவதை நாயனாருக்கு விநாயகர்
குறிப்பாக வுணர்த்தி அச்சத்தைப் போக்கினார். நாயனாரும் அவர்
மனைவியும் இறைவனை அந்நீச வடிவில் நின்று வீழ்ந்து வரவேற்க, இறைவன்
மகிழ்ந்து நாயனாருக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார் என்பது வரலாறு.
அதனால்தான் அவ்விநாயகரை அச்சந்தீர்த்த விநாயகர் என்றழைக்கின்றனர்.

     அருள்புரிந்த இறைமூர்த்தமே “காட்சி கொடுத்த நாயகர்” எனப்
போற்றப்படுகிறார். இம்மூர்த்தி வலக்காலை ஊன்றி இடக்காலைச் சற்று
மடக்கி வலக்கரத்தில் பெருவிரலும் நடுவிரலும் இணைய, இடக்கரத்தை
ரிஷபத்தின் சிரசில் ஊன்றிக் காட்சி தருகிறார்.

     இறைவன் யாகத்திற்கு நீசவடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின்
தலையிலிருந்து கட்குடம் பொங்கிய இடம் “பொங்குசாராய நல்லூர்” (இன்று
வழக்கில் கொங்கராய நல்லூர்) என்றும்; இறைவன் சுமந்து வந்த பறை
தானாக அடிப்பட்ட இடம் “அடியுக்க மங்கலம்” (இன்று அடியக்க மங்கலம்)
என்றும் ; இறந்த கன்றை ஏந்திய இடம் “கடா மங்கலம்” என்றும் இன்றும்
வழங்குகின்றன.

     இறைவன் - மாகாளேஸ்வரர், காளகண்டேஸ்வரர்.
     இறைவி - பக்ஷயாம்பிகை
     தலமரம் - கருங்காலி
     தீர்த்தம் - மாகாள தீர்த்தம்

     சம்பந்தர் பாடல் பெற்றது.