பக்கம் எண் :

564 திருமுறைத்தலங்கள்


     வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக விளங்க, அதிசயமான அழகான
கோலத்தில் காட்சி தருகின்றார்.

     கோயிலுக்கு வெளியே பக்கத்தில் (பின்புறத்தில்) அழகீசர் கோயில் -
அழக நாதர் சந்நிதி ஒன்றுள்ளது. சிவலிங்கத் திருமேனி. நகரத்தார்
திருப்பணியும், பராமரிப்பும் பெற்றுள்ள இக்கோயிலில் நாடொறும் ஒருவேளை
பூஜையே.

     கூத்தனூரில் உள்ள துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி கோயில்கள்
தரிசிக்கத்தக்கன. சரஸ்வதிக்குத் தனிக் கோயில் இங்கிருப்பது விசேஷமானது.
இக்கோயிலை (சரஸ்வதி கோயிலை)க் கட்டியவர் ஒட்டக் கூத்தரின் பேரர்
ஓவாக்கூத்தர் என்பது கல்வெட்டுச் செய்தி. யாழ்ப்பாணம்,
திரு. சி. நாகலிங்கப் பிள்ளை என்பவர் திலதைப்பதிப் புராணம் பாடியுள்ளார்.
இந்நூல் 1941-ல் தேவ கோட்டை மெ.ராம. லெட்சுமணன் செட்டியாரால்
வெளியிடப்பட்டுள்ளது.

    
 “விண்ணர் வேதம் விரித்தோத வல்லார் ஒரு பாகமும்
     பெண்ணார் எண்ணார் எயில் செற்றுகந்த பெருமானிடம்
     தெண்ணிலா வின்ஒளி தீண்டு சோலைத் திலதைப்பதி
     மண்ணுளார் வந்தருள் பேண நின்றம்மதி முத்தமே.”
                                             (சம்பந்தர்)


             
தலபுராணம் - ஆதி விநாயகர் துதி

    
 “அங்குமாய் இங்குமாகி அநாதியாய்ப் பலவாயானைத்
     துங்கமா முகமுந்தூய துதிக்கரம் தானுமின்றிப்
     பங்கயப் பழன வேலித் திலதையாம் பதியின் மேவும்
     புங்கவன் ஆதிநாதன் புதுமலர்த் தாள்கள் போற்றி.”


                        
முத்தீசுவரர் துதி

     
“மலரயன் முகுந்தன் பூமின் மாதுமை வணங்கி யேத்தத்
     திலதருப் பணப் பேர் கொண்ட திருத்தலம் அதனின் மன்னி
     இலகு முத்திராக்க மேனியீசனை யெம்மான் தன்னைக்
     குலவு முத்தீச னென்னுங் குழகனை யேத்தி வாழ்வாம்.”


                     
 சுவர்ண வல்லி துதி

    
 “சுரும்பமர் குழல்கள் போற்றி சுந்தர வதனம் போற்றி
     அரும்பு புன்முறுவல் போற்றி ஆரணற் கருள் செயம்மை
     கரும்புறு பழனவேலித் திலதைக் காஞ்சன மாவல்லி
     சிரம்பெறு பதும நேருஞ் சேவடி போற்றி போற்றி.”