பக்கம் எண் :

566 திருமுறைத்தலங்கள்


     இறைவன் - பாம்புரேஸ்வரர், சேஷபுரீஸ்வரர், பாம்பீசர்,           
               பாம்புரநாரதர்.      
     இறைவி - பிரமராம்பிகை, வண்டார்குழலி     
     தலமரம் - வன்னி     
     தீர்த்தம் - ஆதிசேஷ தீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் குட்டை
              போலுள்ளது)

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     ராஜகோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே சந்நிதி
தெரிகிறது. இடப்பால் திருமலையீசுவரர் சந்நிதி உயரத்தில் தனிக்கோயிலாக
வுள்ளது. இக்கோயிலின் கன்னி மூலையில் நின்று பார்த்தால் திருவீழிமிழலை
விமானம் தெரியும் எனப்படுகிறது. தற்போது மரங்கள் மறைக்கின்றன.

     சட்டநாதர் சந்நிதி விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர்,
பிராகாரத்தில் தலமரமாகிய வன்னியையும் அதன் பக்கத்தில் வன்னீசுவரர்
காட்சியையும் காணலாம். அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது. ஒரு கையில்
தாமரையும் ஒருகையில் உருத்திராக்க மாலையையும் கொண்டு அம்பிகை
வரத அபயமொடு அற்புதமாகக் காட்சி தருகின்றாள்.

     அடுத்துள்ள மண்டபத்தில் பைரவர், சூரியன், மகாவிஷ்ணு, பிரம்மா,
மாணிக்கவாசகர், சுந்தரர், அப்பர், சம்பந்தர், ஆதிசேஷன், சனீஸ்வரன்
முதலிய மூல உருவங்கள் வரிசையாகக் காட்சியளிக்கின்றன. மூலவர் நோக்கிச்
செல்லும்போது முன் மண்டபத்தில் நடராச சபையுள்ளது ; வாயில் கடந்தால்
வலப்பால் உற்சவ மூர்த்தங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நேரே
மூலவர் தரிசனம்.

     பாம்பு வழிபட்ட தலமாதலின் மூலத்தானத்தில் எப்போதேனும் ஓரொரு
காலங்களில் இன்றும் பாம்பினுடைய நடமாட்டம் இருப்பதாகச்
சொல்லப்படுகிறது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நாள்களில் மல்லிகை,
தாழம்பூ வாசனை கோயிலுக்குள் கமகமவென வீசுமாம். அப்போது பாம்பு
கோயிலுக்குள் எங்கேனும் ஓரிடத்தில் உலாவிக் கொண்டிருக்கும் என்பது
பொருளாம்.

     உற்சவத் திருமேனிகளுள் சுப்பிரமணியர் மூர்த்தம் மிகவும்
விசேஷமானது. வள்ளி தெய்வயானையுடன், வச்சிரம், வேல்தாங்கி
இடக்காலால் மயிலை மிதித்துக் காட்சி தருகிறார்.