பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 567


     மாசிமகத்தில் நடைபெறும் பஞ்சமூர்த்தி அபிஷேகமும் சிவராத்திரி
உற்சவமும் இங்கு விசேஷம். மகாசிவராத்திரியில் ஆதிசேஷன் புறப்பாடு
ஐதீகத் திருவிழாவாக நடைபெறுகிறது. மகா சிவராத்திரியில் ஆதிசேஷன்
இறைவனை வழிபட சிற்றம்பல விநாயகர் துணையுடன் ஏற்படுத்திய குளம்,
வடக்கு வீதியில் சிற்றம்பலக் குட்டை என்னும் பெயரில் உள்ளது.

     நாடொறும் நான்கு கால வழிபாடுகள். இராசராசன், இராசேந்திரன்,
சுந்தர பாண்டியன், சரபோஜி மன்னன் முதலியோர் காலத்திய 15
கல்வெட்டுக்கள் இக் கோயிலில் உள்ளன. இக்கல்வெட்டுக்களில் இறைவன்
“பாம்புரம் உடையார்” என்றும், விநாயகர் “ராஜராஜப் பிள்ளையார்” என்றும்,
இறைவி “மாமலையாட்டி” என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். சரபோஜி
மன்னனின் பிரதிநிதி சுபேதரர் ரகுபண்டிதராயன் என்பவனால் வசந்த
மண்டபமொன்று கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இத்தலத்திற்கருகில்
திருவீழிமிழலையும், சிறுகுடியும், வன்னியூரும் உள்ளன.

    
 “ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர்
          ஒளிதிகழ் உருவஞ் சேர் ஒருவர்
     மாதினை யிடமா வைத்த எம் வள்ளல்
          மான்மறி யேந்திய மைந்தர்
     ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய
          அலைகடல் கடைய வன்றெழுந்த
     பாதி வெண் பிறை சடை வைத்த எம்பரமர்
          பாம்புர நன்னகராரே.”          (சம்பந்தர்)

                                   - “ஆடுமயில்
     காம்புரங்கொள் தோளியர் பொற்காவிற் பயில்கின்ற
     பாம்புரங் கொள் உண்மைப் பரம்பொருளே.”     (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. பாம்புரேஸ்வரர் திருக்கோயில்
     திருப்பாம்புரம் - சுரைக்காயூர் அஞ்சல் 612 203
     (வழி) பாலையூர் S.O.
     குடவாசல் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.