பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 569


     புகழப்படும் தனக்கென வாழாப்பிறர்க்குரியாளனாம் ‘பண்ணன்’
என்னும் கொடை வள்ளல் இத்தலத்தில் வாழ்ந்தவன். அம்பிகை
கைப்பிடியளவு மணலால் பிடித்துவைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி
வழிபட்ட தலம். சிறுபிடி - என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று என்பர்.
நன்னிலம் வட்டத்தில் சிறுகுடி என்னும் பெயரில் பல ஊர்களிருப்பதால்
அவற்றினின்றும் வேறுபாடறிய இத்தலம் திருச்சிறுகுடி என்றழைக்கப்
படுகிறது. சூட்சுமபுரி என்பதும் இதன் பெயர். கருடன், செவ்வாய், கந்தர்வர்
ஆகியோர் வழிபட்டது.

     இறைவன் - சூக்ஷ்மபுரீஸ்வரர், மங்கள நாதர், சிறுகுடியீசர்
     இறைவி - மங்களநாயகி, மங்களாம்பிகை
     தலமரம் - வில்வம்
     தீர்த்தம் - மங்கள தீர்த்தம் (கோயிலின் எதிரில் உள்ளது)
      தலவிநாயகர்- மங்கள விநாயகர்

     சம்பந்தர் பாடல் பெற்றது. (இத்தலத்துப் பதிகம் ‘திருமுக்கால்’
யாப்பில் அமைந்துள்ளது.)

     மங்கள தீர்த்தத்தில் செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை
காலை மாலை வந்து நீராடி, கோயிலுக்கு வந்து வழிபட்டுத் திருநீறு பெற்றுச்
செல்வதை இன்றும் காணலாம். இஸ்லாமியர் முதலிய வேற்று மதத்தவர்களும்
வந்து நீராடி வழிபட்டுத் திருநீறு பெற்றுச் செல்கின்றனர். செவ்வாய்
தோஷமுடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால்
அங்காரகதோஷம் நிவர்த்தியாகிறது என்பது இங்கு பிரசித்தம். செவ்வாய்
வழிபாடு விசேஷமானது.

     மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியது.
உள்ளே சென்றால் விசாலமான இடம். பிராகாரத்தில் மங்களவிநாயகர்
சுப்பிரமணியர் சந்நிதிகள். முன்மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி.
நவக்கிரகங்களில் சனீஸ்வரனுக்கு கீழே சனைச்சரன் என்று பெயர்
எழுதப்பட்டுள்ளது. இதுவே சரியான பெயர். இதற்கு மெதுவாக ஊர்ந்து
செல்பவன்
என்று பொருள். இதுவே மருவி சனீச்வரன் என்றாயிற்று.
இங்குள்ள குருக்கள் தமிழறிந்தவராதலால் அழகாகத் தமிழில் சனைச்சரன்
என்று எழுதியிருப்பது காணும்போது தமிழ் நெஞ்சங்கள் அடையும்
ஆனந்தத்திற்கு அளவேது ! அதன்பக்கத்தில் சுவர் ஓரமாக ஞானசம்பந்தர்
- பெரிய மூலத் திருமேனி, இடுப்பில் அரைஞாண் கயிறு, கழுத்து மாலை
பொலிய அழகாகக் காட்சியளிக்கிறது. பக்கத்தில் ஆதிகணபதி, சனீஸ்வரர்,
பைரவர் ஆகியோர் உளர். வலப்பால் அம்பாள் சந்நிதி. அபயவரத்துடன்
நின்ற திருக்கோலம் - பெயருக்கேற்ற முகவிலாசம்.