பக்கம் எண் :

570 திருமுறைத்தலங்கள்


     நேரே மூலவர் சந்நிதி. சுயம்புத் திருமேனி. நெற்றியில் பள்ளமும்
இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. எப்போதும் குவளை
சார்த்தியே வைக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது.
அம்பாளுக்கு உண்டு. கடினமான பாணம். சாம்பிராணித் தைலம்
சார்த்தப்படுகிறது. “தேன்மலர் பொழிலணி சிறுகுடி” - என்னும் ஞான
சம்பந்தர் வாக்குக்கேற்பச் சுவாமிக்கு முன்னால், முன் மண்டபத்தில்
வலப்புறத்தில் சுவர் ஓரத்தில் தேனடை உள்ளது. சாளரம் அமைத்து
அதன்வழியே வெளியிலிருந்து தேனீக்கள் வந்து போகுமாறு செய்து,
மண்டபத்தின் உட்புறத்தில் இரும்புவலை போட்டுப் பாதுகாத்துள்ளனர்.
கோஷ்ட மூர்த்தங்கள் முறையாக உள்ளன.

     இங்குள்ள உற்சவ மூர்த்தங்களுள் சந்திரசேகர் அழகாகவுள்ளது.
இத்தலத்திற்குரிய சிறப்பு மூர்த்தமாகிய “சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி”
மிகமிகச் சிறப்பானது. அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து அம்பாளை
ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள்மீது கை போட்டுக்
கொண்டு காட்சிதரும் அழகு - கண்டு அநுபவித்தால் உணர முடியும்.

     மாசியில் ஏகதின உற்சவம். இம்மாதத்தில் நான்கு செவ்வாய்க்
கிழமைகளில் விசேஷ வழிபாடுகள். மார்கழி ஆதிரையும் பிரசித்தி.
நாடொறும் நான்கு கால வழிபாடுகள். இத்தலத்தின் கிழக்கில்
திருப்பாம்புரமும், தெற்கில் திருவீழிமிழலையும், மேற்கில் அன்னியூரும்,
வடக்கில் தேரழுந்தூரும் உள்ளன.

    
 “செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
     ஒன்னலர்புரம் எரித்தீரே
     ஒன்னலர் புரம் எரித்தீர்உமை உள்குவார்
     சொன்னலமுடையவர் தொண்டே.”       (சம்பந்தர்)

                                       - ஆம்புவனந்
    “துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலஞ் செய்துவகை
     மன்னுஞ்சிறுகுடி யான்மார்த்தமே.”         (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. சூட்சுமபுரீசுவரர் திருக்கோயில்
     திருச்சிறுகுடி
     சரபோஜிராஜபுரம் அஞ்சல் - 609 503.
     (வழி) பூந்தோட்டம் - குடவாசல் வட்டம்
     திருவாரூர் மாவட்டம்.