பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 571


178/61. திருவீழிமிழலை

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மயிலாடுதுறை - திருவாரூர் இருப்புப் பாதையில் பேரளத்தை
யடுத்துள்ள பூந்தோட்டம் நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள
தலம். திருவாரூர், கும்பகோணம், பேரளம், ஆடுதுறை, பூந்தோட்டம் ஆகிய
ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். வீழிச்செடிகள் நிறைந்திருந்தமையால்
வீழிமிழலை என்று பெயர் வந்தது. இத்தலத்திற்குப் பூகைலாசம், கல்யாணபுரம்,
பஞ்சாக்கரபுரம், தக்ஷிணகாசி, ஷண்மங்களஸ்தலம், சுவேதகானனம்,
ஆகாசநகரம், பனசாரண்யம், நேத்திரார்ப்பணபுரம், தேஜிநீவனம் எனப்
பத்துப் பெயர்களுண்டு.  

     இறைவன் - நேத்திரார்ப்பணேசுவரர், விழியழகீசர், விழியழகர்.
     இறைவி - சுந்தரகுஜாம்பிகை, அழகுமுலையம்மை.
     தலமரம் - வீழிச்செடி.
     தீர்த்தம் - விஷ்ணுதீத்தம்

     மூவர் பாடல் பெற்ற தலம். இத்தலம் 23 திருப்பதிகங்களையுடையது.
சேந்தனார் பாடிய திருவிசைப்பாவும், அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்ற
தலம்.

     கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. மிகப் பெரிய கோயில்.
உற்சவமூர்த்தி - கல்யாணசுந்தரர் - விநாயகர் - படிக்காசு விநாயகர்.
இத்தலத்தில், திருமால் சக்கரம் வேண்டி இறைவனைப் பூசை செய்யும் போது
ஒருநாள் ஒருமலர் குறையத் தம் கண்ணையே இடந்து சாத்தி சக்கரத்தைப்
பெற்றார். இவ்வரலாறு திருமுறையில் கூறப்பட்டுள்ளது. கல்யாணசுந்தரரின்
பாதத்தில் விஷ்ணு தம் கண்ணைப் பறித்து அருசித்த அடையாளம் உள்ளது.
உற்சவமூர்த்தியின் வலப்பாதத்தின் மேலே திருமாலின் கண்ணும் கீழே
சக்கரமும் உள்ளன. ஞானசம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு
தந்தருளி அவர்கள் மூலமாகச் சிவனடியார்க்கு அமுதூட்டிய தலம். அவ்வாறு
வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ளன.
படிக்காசுப் பிள்ளையார் மேற்கு பலிபீடத்தின் அருகில் உள்ளார். அருகில்
சம்பந்தர், அப்பரின் உருவங்கள் உள்ளன. இவ்விருவரும் தங்கியிருந்த
திருமடங்கள் வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்) மேற்குக்
கோடியிலும் (அப்பர்) உள்ளன.