மண்டபத்தில் கல்யாணசுந்தரர் - மாப்பிள்ளை சுவாமியாகக் காட்சி தருகிறார். பாதத்தில் திருமாலின் கண்ணாகிய மலர் உள்ளது. பிட்சாடனர், ரதிதேவி, வசிஷ்டர், காமதேனு, மனு முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் இஃது. இங்குத்தான் மிழலைக் குறும்பர் என்னும் வேடுவர் விளாங்கனியை நிவேதித்து அருள்பெற்றார். ஞானசம்பந்தரும், அப்பரும், படிக்காசு பெற்றபோது அவற்றைக் கடைத்தெருவிற்குக் கொண்டு சென்று பொருள்களை வாங்கிய கடைத்தெரு இப்போது ஐயன்பேட்டை என வழங்குகிறது. அங்கே உள்ள சுவாமி பெயர் - செட்டியப்பர். அம்பாள் - படியளந்த நாயகி. உற்சவமூர்த்தி தராசு பிடித்த கையோடும், அம்பாள் படியைப் பிடித்த கையோடும் காட்சி தருகின்றனர். நடராஜர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சக்கரதானர், பிட்சாடனர், காலசம்ஹாரர், சுவர்க்காவதாநேசர், நாயன்மார்கள் முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன. தலவிருக்ஷம் ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொன்றாக உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. முதலில் சந்தனமாகவும், பிறகு சண்பகமாகவும், பின் வீழிச்செடியாகவும் உள்ளது. அடுத்து இருக்கவுள்ளது பலாமரமாகும். இத்திருக்கோயிலைச் சுற்றி, பத்மதீர்த்தம், புஷ்கரணி, விஷ்ணு தீர்த்தம், திரிவேணிசங்கமம், குபேரதீர்த்தம், இந்திரதீர்த்தம், வருணதீர்த்தம், இலக்குமிதீர்த்தம், வசிட்டதீர்த்தம் முதலாக 25 தீர்த்தங்கள் உள்ளன. சுவாமி சந்நியில் உள்ளது - புஷ்கரணிதீர்த்தம் மேற்கு மதிலைச் சார்ந்து உள்ளது - விஷ்ணுதீர்த்தம் தாமரைக் குளம் உள்ளது - பிரம, பத்மதீர்த்தங்கள் என்பன. சித்திரை மாதத்தில் பெருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி, சஷ்டி, ஆதிரை முதலிய பெரு உற்சவங்களும் நன்கு நடைபெறுகின்றன. “கண்ணிற் கனலாலே பொடியாகப் பெண்ணுக் கருள் செய்த பெருமானுறைகோயில் மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும் விண்ணிற் புயல்காட்டும் வீழிம்மிழலையே.” (சம்பந்தர்) நீற்றினைநிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக் கொண்டு ஏற்றுழி ஒருநாள் ஒன்று குறையக்கண் ணிறைய விட்ட ஆற்றலுக் காழிநல்கி அவன் கொணர்ந்திழிச்சுங் கோயில் வீற்றிருந்தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்தனாரே (அப்பர்) |