பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 575


179/62. வன்னியூர்.

அன்னியூர். அன்னூர்.

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     அரிசிலாற்றின் வடகரையில் உள்ளது. மக்கள் அன்னியூர் என்று
வழங்குகின்றனர்.

     (1) தனிப் பேருந்தில் வருவோர் கும்பகோணம் - காரைக்கால் (வழி)
உப்பிலியப்பன் சாலையில் S. புதூர் என்ற இடத்திற்கு வந்து, அங்கிருந்து
தெற்கில் திரும்பி வடமட்டம் சென்று அங்கிருந்து அதே சாலையில்
(திருவீழிமிழலை சாலையில்) மேலும் சென்றால் ஊரையடையலாம்.

     (2) திருவீழிமிழலையிலிருந்து 4 கி.மீ. தொலைவு. (3) கும்பகோணம் -
அன்னியூர் நகரப்பேருந்து செல்கிறது.

     சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. தக்கன் வேள்வியில் பங்கு
கொண்ட சாபம்தீர அக்கினி வழிபட்டதலமாதலின் வன்னி - அனல், (நெருப்பு).
வன்னியூர் என்று பெயர் பெற்றது.

     இறைவன் - அக்கினிபுரீசுவரர், அக்னீஸ்வரர்
     இறைவி - கௌரி
     தலமரம் - வன்னி.
     தீர்த்தம் - அக்கினிதீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் உள்ளது.

     இதில் நீராடினால் இரத்தக் கொதிப்பு, உஷ்ணரோகம் முதலியன
நீங்கும்.)

     அப்பர் பாடல் பெற்றது.

     நகரத்தார் திருப்பணியில் கோயில் நன்குள்ளது. காத்யாயனி மகளாக
அம்பாள் வந்து தோன்றி, இறைவனை மணக்க இத்தலத்தில் தவமிருந்து
அவ்வெண்ணம் திருவீழிமிழலையில் ஈடேறப் பெற்றதால்,
திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபடின் திருமணம் கூடும் என்பது
இன்றுமுள்ள நம்பிக்கை, சிறிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்து வலமாக
வரும்போது கருவறைச் சுவரில் அப்பர், அக்கினி, கௌரி, சிவலிங்கம்,
காமதேனு பால்சொரிவது, ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசையாகவுள்ளன -
பக்கத்தில் ஆலமர் கடவுள் உள்ளார்.