நந்தியெம்பெருமான் சென்று கஞ்சனுடன் போரிட்டு அவனை அடித்து அழித்தார். அவ்வாறு அழித்தபோது அவ்வசுரனின் ; லலாடம் வீழ்ந்த இடம் தற்போது ‘லாலாபேட்டை’ என்றும், சிரசு வீழ்ந்த இடம் “சீகராஜபுரம்” என்றும், வலக்கால் அறுபட்டு வீழ்ந்த இடம் “வடகால்” என்றும், தென்கால் வீழ்ந்த இடம் “தென்கால்” என்றும் மணிக்கட்டு வீழ்ந்த இடம் “மணியம் பட்டு” என்றும், மார்பு, வீழ்ந்த இடம் “குகையநல்லூர்” என்றும் வழங்கப்படுகிறது. இவ்வூர்களெல்லாம் திருவலத்திற்கு 3 கி. மீ. தொலைவில் உள்ளன. இந்நிகழ்ச்சியையொட்டியே நந்தி, காவலுக்காகக் கிழக்கு நோக்கியுள்ளார். காஞ்சனகிரியில் அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் இறைவனருளால் அவ்விடத்தைப் புனிதப்படுத்த சிவலிங்கங்கள் உண்டாயின. இன்றும் இம்மலையில் குளக்கரையில் எண்ணற்ற சிவலிங்கங்கள் இருப்பதையும் தோண்டினால் கிடைப்பதையும் நேரில் பார்க்கலாம். சிப்காட் தொழிற்பகுதி வழியாகச் சாலையில் செல்லும் போது இம்மலையைப் பார்க்கலாம். (லாலாபேட்டைக்குப் பக்கத்தில் இம்மலை உள்ளது. லாலாபேட்டைக்கு ஆற்காட்டிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது.) மூலவர் சந்நிதி வாயிலில் நுழைந்தவுடன் நேரே சிவலிங்கத் திருமேனி தரிசனம். வாயிலைக் கடந்ததும், இங்கு வழிபட்ட சனக முனிவரின் ‘திருவோடு’ சுவாமிக்கு நேரே வெளியில் பிரதிஷ்டை செய்திருப்பதைக் காணலாம். உள்சுற்று வலம் வரும்போது மூலையில் ‘பிராமி’ உருவச்சிலையுள்ளது. தெற்கு நோக்கிய பக்கவாயில் உள்ளது. கருவறை அகழி அமைப்புடையது. கருவறைச்சுவரில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன. கோஷ்ட மூர்த்தமாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன் உள்ளனர். எதிரில் சண்டேசுவரர் சந்நிதி, அறுபத்துமூவரின் உற்சவ, மூலத்திருமேனிகள் மேலும் கீழுமாக இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன. சங்கரநாராயணர் திருவுருவம் வலப்பால் உள்ளது. இடப்பால் பள்ளத்தில் ‘பாதாளேஸ்வரர்’ சந்நிதி உள்ளது. இதில் சிவலிங்கம் நந்தி, விநாயகர் மூலத்திருமேனிகள் உள்ளன. பஞ்சம் நேரின், இப்பெருமானுக்கு ஒரு மண்டலகாலம் அபிஷேகம் செய்யின் மழை பெய்யும் என்று சொல்லப்படுகின்றது. மூலவர் வாயிலில் உள்ள இரு துவார பாலகர்கள் திருமேனிகள் சிற்பக் கலையழகு வாய்ந்தவை. இவற்றுள் ஒன்று ஒரு கையை மேலுயர்த்தி, நடனபாவ முத்திரையுடன் விளங்குகின்றது. |