மூலவர் - சிவலிங்கத் திருமேனி, சுயம்பு, கிழக்கு நோக்கியது. சதுர பீடஆவுடையார். சந்நிதிக்கு வெளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரிய நந்திக்குப் பக்கத்தில் நடராச சபையும், அடுத்து நவக்கிரக சந்நிதியும் உள்ளன. நடராச மூர்த்தம் உருண்டை வடிவமான பிரபையுடன் அழகாகவுள்ளது. மூலவரைத் தரிசித்து வெளிவந்து நடராசப் பெருமானைத் துதித்து நவக்கிரகத்தை வலம் வந்து கொடிமரத்தடியில் வீழ்ந்து வணங்கி, வலமாக வரும்போது அகோர வீரபத்திரர் சந்நிதி உள்ளது. இங்குள்ள இரு உருவங்களில் ஆதி உருவம் சுவரில் உள்ளது. புதிய பிரதிஷ்டை முன்னால் உள்ளது. பக்கத்தில் நால்வர் பிரதிஷ்டை. அடுத்துச் சனிபகவான் சந்நிதி உள்ளது. இதற்குப் பக்கத்தில் விநாயகர் சந்நிதி உள்ளது. சதுரபீடத்தின்மேல் பத்மபீடம் அமைய அதன்மீது அமர்ந்த நிலையில் விநாயகர் காட்சி தருகிறார். இறைவனிடம் கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில் துதிக்கையில் மாங்கனியுடன் திகழ்கின்றார். பங்குனியில் பெருவிழா நடைபெறுகின்றது. ஆருத்ரா தரிசனம் விசேஷம். கஞ்சனுக்கு இறைவன் முத்தி தந்த ஐதீகம், திருவிழாவாக இன்றும் நடைபெறுகின்றது. இதற்காகத் தை மாதம் பொங்கல் கழித்து 10-ஆம் நாள் சுவாமி இங்கிருந்து புறப்பட்டுக் காஞ்சனகிரிக்கு எழுந்தருளுகிறார். இம்மலையில் (காஞ்சனகிரியில்) சித்ரா பௌர்ணமியில் குளக்கரையிலிருந்து பார்த்தால் ஜோதியொன்று தோன்றிப் பின் மறைகின்றதாம். இப்போதும் இது தெரிவதாகப் பார்த்தவர்கள் சொல்கின்றனர். இம் மலையின் சிறப்பு அறிந்து மக்கள் தற்போது செல்லத் தொடங்கியுள்ளனர். திருவலம் என்றாலே “மௌனசுவாமிகள்” நினைவு அனைவரின் உள்ளங்களிலும் தோன்றும். மிகவும் பிரசித்தமாக விளங்கியவர். அவர் நினைவிடம் பக்கத்தில் உள்ளது. இத்தலத்திற்குப் பக்கத்தில் 10. கி.மீ. தொலைவில் ‘வள்ளிமலை’ உள்ளது. “எரித்தவன் முப்புரம் எரியின் மூழ்கத் தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல் விரித்தவன் வேதங்கள் வேறு வேறு தெரித்தவன் உறைவிடம் திருவல்லமே.” (சம்பந்தர்) |