185/68. திருக்கலயநல்லூர் சாக்கோட்டை | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் வழக்கில் சாக்கோட்டை என்ற பெயரில் வழங்குகிறது. கும்பகோணம் - மன்னார்குடி பேருந்துச் சாலையில் உள்ள தலம். கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. கோயில் அருகிலேயே சாலை செல்கிறது. மக்கள் இக்கோயிலை “கோட்டைச் சிவன்கோயில்” என்று சொல்கின்றனர். ஒரு காலத்தில் கோயிலைச் சுற்றிக் கோட்டை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இன்று அதன் இடிபாடுகளே மேடாகக் காணப்படுகின்றன. கோயிலுக்கு வெளியிலும் உள்ளுமாக இரு அகழிகள் உள்ளன. இதனால் பண்டைநாளில் இது சோழ மன்னர்களின் முக்கிய இடமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இன்று இங்குக் கோயிலும் ஒருசில வீடுகளுமே உள்ளன. ஞானசம்பந்தர் தம் பதிகத்தில் இப்பகுதியில் சாக்கியர் (பௌத்தர்) வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளதால் ‘சாக்கியர் கோட்டை’ என்று பெயர் வழங்கி அதுவே பின்பு சாக்கோட்டையாக மாறி வழங்குகின்றது என்பர். ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாகத் தலவரலாறு சொல்லப்படுகிறது. இறைவன் - அமிர்தகலசநாதர், அமிர்தகலேஸ்வரர். இறைவி - அமிர்தவல்லி. தலமரம் - வன்னி, (இன்று இல்லை). சுந்தரர் பாடல் பெற்றது. கிழக்கு நோக்கிய சந்நிதி. முன்புறம் மதிலும் வாயிலும் உள்ளன. அடுத்து மூன்றுநிலை கோபுரம். நாய்க்கர் காலச் செங்கல் மண்டபம் உள்ளது. இதன் வடபால் அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது. மகாமண்டப வாயிலில் வடபால் சிறிய தண்டபாணியும் தென்பால் நர்த்தன விநாயகரும் உள்ளனர். முன் மண்டபத்தில் நந்தி பலிபீடம் உள்ளது. ஒரே கல்லில் புடைச்சிற்பமாகவுள்ள சப்தமாதர் சிற்பங்கள் தரிசிக்கத்தக்கன. இங்குள்ள (1) தட்சிணாமூர்த்தி - புதிய திருமேனி அதிசயமான அமைப்புடையது. இத்திருமேனி வலது மேற்கையில் ருத்ராக்ஷ |