2. நன்னிலம் - கும்பகோணம் பேருந்தில் செல்வோர் அச்சுத மங்கலத்தில் இறங்கித் திருவாரூர் பாதையில் 1 கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். 3. தனிப்பேருந்தில் செல்வோர் கும்பகோணம் - மன்னார்குடிப் பாதையில் சென்று, குடவாசல் கைகாட்டி காட்டும் பக்கம் திரும்பி, திருவாரூர்ப் பாதையில் சென்று, நாச்சியார் கோயிலை தாண்டிப் பிரிகின்ற நன்னிலம் பாதையில் சென்று அச்சுதமங்கலத்தையடைந்து, குடவாசல் திருவாரூர்ப் பாதையில் திரும்பிச் சென்றால் ஸ்ரீ வாஞ்சியத்தை அடையலாம். காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்களுள் இது ஒன்றாகும். மற்றவை :- 1. திருவையாறு 2. வேதாரண்யம் 3. மயிலாடுதுறை 4. திருவிடைமருதூர் 5. திருவெண்காடு திருமால் சிவபெருமானை வழிபட்டு, இலக்குமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்ற தலம். (திருவை வாஞ்சித்த தலம் - திருவாஞ்சியம்) எமன் வழிபட்ட தலம். இங்கு எமனுக்குத் தனிக்கோயிலுள்ளது. இத்தலத்தில் இறப்பவர்க்கு எமவாதனையில்லை. கோயிலுள் எமவாகனமும் உள்ளது. வாஞ்சியப்பதி, சந்தனவனம், ஜாந்தாரண்யம், பூகைலாசம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். பிரமன், இந்திரன், பராசரர், அத்ரி முதலியோர் வழிபட்ட தலம். இங்குள்ள குப்தகங்கைத் தீர்த்தம் மிகவும் புனிதமானது. கார்த்திகை ஞாயிறு நீராடல் இங்குச் சிறப்பாகும். பின்வரும் தலபுராணப் பாடல் இக்கருத்தையுணர்த்தும் :- “மெய்தரு கயநோய் குட்டம் விளைத்தமுற் கொடிய சாபம் பெய்துறல் செய்யும் வன்கண் பிரமராக்கதம் வேதாளம் எய்திடின் அன்னதீர்த்தம் இழிந்ததில் படியத்தீரும் செய்திரும்கடத்தின் ஏற்றுத் தெளிக்கினும் தீருமன்றே.” இறைவன் - வாஞ்சிநாதேஸ்வரர், வாஞ்சிலிங்கேஸ்வரர். இறைவி - மங்களநாயகி, வாழவந்தநாயகி. தலமரம் - சந்தனம் தீர்த்தம் - குப்தகங்கை, எமதீர்த்தம். (1. ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையிலிருந்து புறப்பட்டு இத்தலத்திற்கு வந்து பெருமானை வணங்கினர். 2. சுந்தரர், நன்னிலத்துப் பெருங்கோயிலைப் பணிந்து, திருவீழிமிழலை வணங்கி இத்தலத்திற்கு வந்து தொழுதார்.) |