திருவாசகத்திலும் அருணகிரிநாதர் வாக்கிலும் இத்தலம் இடம் பெறுகின்றது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக் கோயில் உள்ளது. எமன் நான்கு கரங்களுடன் (பாசம், கதை, சூலமேந்தி) இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றான். அவன் பக்கத்தில் ரிஷி ஒருவருடைய உருவச்சிலை உள்ளது. இன்னாரென்று தெரியவில்லை. ஒருவேளை எமனிடம் உபதேசம் பெற்ற நசிகேதன் போன்றிருக்கலாமோ? அவனோ சிறியவன். இவ்வடிவமோ தாடியுடன் ஒரு கையில் கதையையூன்றி, ஒரு கையை உயர்த்தி, ஒரு கையைத் தொங்கவிட்டுக் கொண்டு நின்ற நிலையில் காட்சி தருகிறது. தரிசித்துக் கொண்டு முன்மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள். உள்வாயிலைத் தாண்டியதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. கவசமிட்ட கொடிமரம்- பலிபீடம் நந்தி உள்ளன. வெளிப்பிராகாரத்தில் ஏதுமில்லை. அடுத்து ‘நட்டுவன் பிள்ளையார் சந்நிதி’. தலப்பதிகம் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளது. இடப்பால் அதிகார நந்தி உள்ளார். மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன. மூலவர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு - சற்று தடித்த உயர்ந்த பாணம். தீபஒளியில் வணங்கும்போது மனம் நிறைவு பெறுகிறது. உள் சுற்றில் வெண்ணெய்ப் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சந்நிதிகள் உள்ளன. அதையடுத்துக் காசிக்குச் சமமான தலங்களுக்குரிய சிவலிங்கச் சந்நிதிகள் அகோரேஸ்வரர், பஞ்சநாதேஸ்வரர், மயூரநாதேஸ்வரர், மகாலிங்கேசர் - முதலான பெயர்களில் உள்ளன. இங்குள்ள துர்க்கை சந்நிதி விசேஷமானது. நடராசசபையிலுள்ள நடராச மூர்த்தம் மிகச்சிறப்பாக, உரிய லட்சணங்களுடன் அமைந்துள்ளன தரிசிக்கத்தக்கது. அடுத்து யோகபைரவர், சூரியன், சந்திரன், ராகு முதலிய மூலத்திருமேனிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள நந்திதேவர் ‘கருவறுத்த தேவர்’ என்றழைக்கப்படுகிறார். தலபுராணம் - ஸ்ரீ வாஞ்சிநாத பிரபாவம் - சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் உள்ளது. நாடொறும் ஆறு காலபூஜைகள், காமிக ஆகம அடிப்படையில் நடைபெறுகின்றன. அர்த்த சாம தேசாந்திரி கட்டளை (இருவருக்கு) உள்ளது. தலம் - 38 |