ஆடிப்பூரம், கார்த்திகை ஞாயிறு நாள்கள், மாசிமகப்பெருவிழா முதலிய விழாக்கள் சிறப்பானவை. எமன், உலக உயிர்களைக் கொல்லும் பாவம் தீர, இங்கு இறைவனை வழிபட்டு இறைவனுக்கு வாகனமாகும் தன்மையைப் பெற்றான் ஆதலின், எமனுக்குக் காட்சி தரும் ஐதீகவிழா மாசிமகப் பெருவிழாவில் இரண்டாம் நாள் விழாவாக நடைபெறுகிறது. அன்று சுவாமி எமவாகனத்தில் புறப்பாடாகி எம தீர்த்தத்தில் தீர்த்தவாரி. ஊரில் வழங்கும் செவிவழிச் செய்திகள் வருமாறு :- (1) இவ்வூர் பெரிய ஊராக இருந்தது. கமலமுனி என்னும் சித்தர் இவ்வூருக்கு வந்தபோது அவர் பெருமையறியாது சிறுவர்கள் அவரை இகழ்ந்ததால், அவர் சாபம் தர அதனால் இவ்வூர் சிறிய கிராமமாகி விட்டது. (2) மேற்படி சிறுவர்கள் வண்ணார், குலாலர், ஆயர் மரபைச் சேர்ந்தவர்களாகயிருந்தமையால் இன்றும் மேற்படி பிரிவினர் தத்தம் குலத்தொழிலைச் செய்துகொண்டு இங்கு வாழ்வதில்லை. இம் மரபைச் சேர்ந்தவர்கள் பிறதொழில்களைச் செய்வோராய் வாழ்கின்றனர். ஆனால் தங்கள் மரபுத் தொழிலைச் செய்ய முற்படும்போது அதற்குத் தடங்கல் வந்து விடுகிறது. பிற்காலச் சோழர்கள், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த இத்தலக் கல்வெட்டில் இவ்வூர் “குலோத்துங்க சோழவள நாட்டுப் பனையூர் நாட்டுத் திருவாஞ்சியம்” என்று குறிக்கப்படுகிறது. இவ்வூருக்கு ‘ராஜகம்பீர சதுர்வேதி மங்கலம்’ என்ற பெயர் உண்டு என்பதும் , கல்வெட்டுகள் மூலம் நிலதானம், வரிவிலக்கு முதலிய செய்திகளும் தெரியவருகின்றன. “வன்னி கொன்றை மதமத்தமெருக் கொடு கூவிளம் பொன்னயன்ற சடையிற் பொலிவித்த புராணனார் தென்னவென்று வரி வண்டிசைசெய் திருவாஞ்சியம் என்னையாளுடை யானிடமாகவுகந்ததே. (சம்பந்தர்) “நீறுபூசி நிமிர்சடை மேற்பிறை ஆறுசூடும் அடிகள் உறைபதி மாறுதொனொருங்கும் வயல் வாஞ்சியம் தேறிவாழ்பவர்க்குச் செல்வமாகுமே.” (அப்பர்) |