| (நளச்சக்ரவர்த்திக்கு இங்குச் சனியின் அனுக்கிரகம் கிடைத்து, திருநள்ளாற்றில் விடுதலையாயிற்று என்பர்.) தலமரம் புன்னை உள்ளது. மூலவர் - வாணாசூரன் (பெயர்த்தெடுக்கமுயன்றதால்) கோணப்பிரான் என்னும் பெயருக்கேற்பச் சற்று வடக்காகச் சாய்ந்துள்ளது. குவளை சார்த்தப்பட்டுள்ளது. மூலவருக்குப் பக்கத்தில் சந்திரசேகரர் தனிச்சந்நிதி உள்ளது. இங்கு இவரே பிரதானமாவார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர் ஆலிங்கனகல்யாண சுந்தரர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன. நடராசசபை அழகாகவுள்ளது. உற்சவ மூர்த்தங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 1) அக்கினி (2 முகம் 7 கரங்கள் 3 திருவடி 4 கொம்புகள் 7 ஜ்வாலைகளுடன் கூடிய உருவம்) 2) முகாசூரசம்ஹார மூர்த்தி, 3) சோமாஸ்கந்தர் முதலியவை மிகச்சிறப்பானவை. திருப்புகலூர்க் கோயிலுக்குள்ளேயே திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் உள்ளது. மூலவரைத் தரிசிக்கும்போது வலப்பால் உள்ளது. வர்த்தமானீச்சரம் ஆகும் - தனிக்கோயில். சந்நிதியுள் நுழைந்ததும் இடப்பால் முருகநாயனார் சந்நிதி. சம்பந்தர் பதிகக் கல்வெட்டுள்ளது. வர்த்தமானலிங்கம் அழகான மூர்த்தி. அம்பாள் மனோன்மணி சிறிய அழகான சந்நிதி. இத்திருக்கோயில் சம்பந்தர் பாடல் மட்டுமே பெற்றது. வைகாசி விசாகத்தில் பெருவிழா ஏகதின உற்சவமாகியுள்ளது. அப்பர் சுவாமி விழா சித்திரைச் சதயத்தில் பத்து நாள்களுக்கு மிகச்சிறப்பாக நடைபெறுகின்றது. இத்தலத்துக் கல்வெட்டு ஒன்று திருநாவுக்கரசரை “குளிச்செழுந்த நாயனார்” என்றும் ; முருகநாயனார் மடத்தை “நம்பி நாயனார் திருமடம்” என்றும் ; திருநீலகண்டயாழ்ப்பாணரை “யாழ்முரி நாயனார், தருமபுரத்து நாயனார்” என்றும் குறிப்பது, உணர்ந்து இன்புறத்தக்க செய்தியாகும். பெரியகோயில் - நல்ல பராமரிப்பு. ‘குறிகலந்த இசைபாடலினானசையா லிவ்வுல கெல்லாம் நெறிகலந்ததொரு சீர்மையனா யெருதேறிப் பலிபேணி முறிகலந்ததொரு தோலரை மேலுடையானிட மொய்ம்மலரின் பொறி கலந்தபொழில் சூழ்ந்தயலே புயலாரும் புகலூரே.” (சம்பந்தர்) |