194/77. இராமனதீச்சரம் திருக்கண்ணபுரம் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். திருச்செங்காட்டங் குடியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ளது. நன்னிலம், திருப்புகலூர் முதலிய இடங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. மக்கள் வழக்கில் ‘கண்ணபுரம்’ என்றாயிற்று. இராமன் (இராவணனைக் கொன்ற கொலைப்பாவம், நீங்க) இறைவனை வழிபட்ட தலம் - இராமனது ஈச்சுரம். இராமர் வந்தபோது நந்தி தடுத்ததாகவும், அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்து, காட்சி தந்ததாகவும் பின்பு இராமன் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இராம - நந்தீச்சரம் என்பது மருவி இராமனதீச்சரம் ஆயிற்று என்பர். இதற்குச் சான்றாக இத்தலத்துக்குரிய சோமாஸ்கந்த மூர்த்தத்தில் நந்திதேவர் (அம்பாள் கரத்தில்) உள்ளார். இப்போது இம்மூர்த்தம், பாதுகாப்பு கருதித் திருப்புகலூர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. இறைவன் - இராமனதீஸ்வரர். இறைவி - சூளிகாம்பாள், சரிவார்குழலி. தலமரம் - சண்பகம் (தற்போது மகிழமரம்தான் உள்ளது.) தீர்த்தம் - இராமதீர்த்தம் (கோயிலின் எதிரில் உள்ளது.) சம்பந்தர் பாடியது. கிழக்கு நோக்கிய திருக்கோயில். எதிரில் இராமதீர்த்தம் உள்ளது. கொடிமரமில்லை. வலப்பால் அம்பாள் சந்நிதியுள்ளது. நின்ற திருக்கோலம் - தெற்கு நோக்கியது. வெளிச்சுற்றில் நந்தவனம் உள்ளது. விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, காலபைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. மூலவர் - பெரிய திருவுருவம். உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன்கூடிய உயர்ந்த பாணம். தீபாராதனையின்போது திருமேனியில் சோதியைக் காணலாம். கோஷ்டமூர்த்தங்களாக, தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேசுவரர் சந்நிதி. சுவாமி விமானம் வேசர அமைப்புடையது. |