பக்கம் எண் :

610 திருமுறைத்தலங்கள்


     அடுத்து திருமருகலும் உள்ளது.) ஊர் சாலையோரத்தில் உள்ளது.
திருவிற்குடிக்கு இத்தலம் பக்கமே. பைரவ மகரிஷி வழிபட்ட தலம்.

     சுங்கம் கொடுக்க அஞ்சிய வணிகன் ஒருவன், சுங்கமில்லாத பயறு
மூட்டைகளாகத் தன் மிளகுப் பொதிகளை மாற்றித் தருமாறு வேண்ட,
அவனுக்கு இறைவன் பயறு மூட்டைகளாக மாற்றித் தந்து அருளியதால்
பயற்றுநாதர் என்று பெயர் பெற்றார் என்பது செவி வழிச் செய்தி.

     இறைவன் - முக்தபுரீஸ்வரர், திருப்பயற்றுநாதர்
     இறைவி - நேத்ராம்பிகை, காவியங்கண்ணி

     தலமரம் - சிலந்தி மரம் (இம்மரத்தின் மலர் மஞ்சள் நிறத்தில் சிலந்திப்
பூச்சி வடிவில் இருக்கும். சித்திரை வைகாசியில் பூக்கும் - மணமுண்டு. இலை,
புன்னையிலைபோல இருக்கும். இம்மரம் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் உள்ளது.

     தீர்த்தம் - கருணா தீர்த்தம் (கோயில் முன்பு உள்ளது.)
     இதனைப் பிரம தீர்த்தம் என்றும் கூறுவர்.

     அப்பர் பாடல் பெற்றது.

     கிழக்கு வாயில் வழியே உட்சென்றால் நந்தி, பலிபீடம், தண்டபாணி
சந்நிதி வடபால் தனியே உள்ளது. வாகன மண்டபமுளது. தலவிநாயகர் -
சித்தி விநாயகர். மகாமண்டபத்தில் நடராசசபை. அடுத்து நால்வர்,
வீரமாகாளி, அகத்தியர், பிரதோஷநாயகர், சுப்பிரமணியர், விநாயகர், உற்சவத்
திருமேனிகள் உள்ளன.

     அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. இங்குள்ள பெரிய மண்டபத்தில்
சோமாஸ்கந்தர் சந்நிதி சிறப்பாகவுள்ளது. சுவாமி - மூலவர் - ஆவுடையார்
நாற்கோண வடிவம். பழைமையான திருமேனி.

     இங்குள்ள கருணா தீர்த்தத்தில் மூழ்கி அம்பிகையை வழிபட்டால்
கண்நோய் நீங்கும் என்றொரு செய்தி சாசனத்தின் மூலம் தெரிய வருகிறது.
அம்பாள் வலக்கை அபயமும், இடக்கையில் ருத்ராக்ஷ மாலை, மற்றொரு
வலக்கையில் தாமரை, இடக்கையைத் தொடையில் ஊன்றியவாறு, நான்கு
கரங்களுடன் காட்சி தருகின்றாள்.

     அம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விசேஷமாக
அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகைச் சோமவாரங்கள்
சுவாமிக்கு விசேஷம்.