பக்கம் எண் :

618 திருமுறைத்தலங்கள்


     இறைவன் - மாணிக்கவண்ணர், ரத்னகிரீஸ்வரர்
     இறைவி - வண்டுவார்குழலி, ஆமோதாளகநாயகி
     தலமரம் - (மருகல் என்னும் ஒருவகை) வாழை
     தீர்த்தம் - இலக்குமி தீர்த்தம் (அ) மாணிக்க தீர்த்தம்
             (கோயிலுக்கு எதிரில் உள்ளது.)

     சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடியது.

     இராசகோபுரம் ஐந்து நிலைகளுடன் புதுப்பொலிவுடன் திகழ்கின்றது.
எதிரில் திருக்குளம் நீராழி மண்டபத்துடன் உள்ளது. கரையில் முத்து
விநாயகர் சந்நிதி.

     வாயில் கடந்து உட்சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன.
இடப்பால் மேடையுடன் வன்னி மரம் உள்ளது. இம்மரத்தினடியில்தான்
ஞானசம்பந்தர், விஷந்தீர்த்து எழுப்பிய செட்டி மகனுக்கும், செட்டிப்
பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

     படிகளேறி முன் மண்டபத்தையடைந்தால் வலப்பால் அம்பாள் சந்நிதி
உள்ளது. தலப்பதிகக் கல்வெட்டு இடப்பாலுள்ளது. சனி பகவான் சந்நிதி
உள்ளது. மேலேறிச் சென்றால் நேரே சோமாஸ் கந்தர் சந்நிதி. பக்கத்தில்
மாணிக்கவண்ணர் சந்நிதி உள்ளது. இருபுறமும் விநாயகரும், செட்டிப்
பிள்ளையும், பெண்ணும் உள்ளனர்.

     மூலவர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு மூர்த்தி எனப்படுகிறது.
கிழக்கு நோக்கியது. எடுப்பான தோற்றம் - சதுர ஆவுடையார். ‘மடையார்
குவளை மலரும் மருகல் உடைய’ பெருமானை மனமாரத் தொழுதுபாடி
வணங்குகிறோம். உள்பிராகாரத்தில் அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள்,
பராசரலிங்கம், விநாயகர், சுப்பிரமணியர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
தலமரம் - வாழை, வளர்கின்றது.

     நடராச சபையின் வாயிலில் பதஞ்சலி, வியாக்ரபாதர் உருவங்கள்
வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. நவக்கிரக சந்நிதியும், பைரவர், சூரியன்
திருவுருவங்களும், ஒரே பீடத்தில் அமைந்துள்ள செட்டி மகன், செட்டிப்
பெண் மூலத்திருவுருவங்களும், பக்கத்தில் ஞானசம்பந்தர் மூலமேனியும்
அடுத்தடுத்துள்ளன.

     வெளிச்சுற்றில் சப்தமாதாக்கள், விநாயகர், சௌந்தரநாயகி,
மருகலுடையார் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகக் கணபதியும்,
தட்சிணாமூர்த்தியும், லிங்கோற்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர்.
அம்பாள் சந்நிதியில் குசகேது மன்னன் வரலாறும், ஞானசம்பந்தர்
விடந்தீர்த்த வரலாறும் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. நாடொறும் ஐந்து
கால பூசைகள் நடைபெறுகின்றன.