பக்கம் எண் :

620 திருமுறைத்தலங்கள்


198/81. திருச்சாத்தமங்கை

(கோயில்) சீயாத்தமங்கை

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் வழக்கில் கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை,
செய்யாத்தமங்கை
என்று பல பெயர்களில் வழங்கப் பெறுகின்றது.
திருமருகலையடுத்த தலம்.

     திருமருகலிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் 1 கி.மீ. சென்று,
‘கோயில் சீயாத்தமங்கை’ என்னும் வழிகாட்டிக் கல் உள்ள இடத்தில் பிரிந்து
செல்லும் சாலையில், எதிர்ப்புறமாக 1 கி.மீ. செல்லவேண்டும். முதலில் வரும்
ஊர்ப்பகுதி சீயாத்தமங்கையாகும். சற்று உள்ளே மேலும் சென்றால் கோயில்
உள்ள பகுதியை அடையலாம். இப்பகுதி ‘கோயில் சீயாத்தமங்கை’
எனப்படுகிறது. இடையில் மூடிகொண்டான் ஆறு பாய்கிறது.

     ஊர்க்குச் ‘சாத்தமங்கை’ என்றும், கோயிலுக்கு ‘அபயவந்தீசம்’ என்றும்
பெயர். பிரமன் பூசித்த தலம். திருநீலநக்க நாயனாரின் அவதாரப்பதி.
நகரத்தார் திருப்பணி பெற்றது.

     இறைவன் - அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வர்.
     இறைவி - உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை.
     தலமரம் - கொன்றை

     தீர்த்தம் - கோயிலின் முன் உள்ள தீர்த்தக்குளம். இக்குளத்தில்
மேற்பாதி சந்திர தீர்த்தம் என்றும் கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம் என்றும்
சொல்லப்படுகிறது.

     சம்பந்தர் பாடிய தலம்.

     மேற்கு நோக்கிய திருக்கோயில். சுவாமி அம்பாள் சந்நிதிகள்
தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் மேற்கு நோக்கியே உள்ளன.
உயர்ந்த சுற்றுமதிலையுடைய பெரிய கோயில். ஆலயத்தின் பக்கத்தில்
நகரத்தார் சத்திரம் உள்ளது. சுவாமி ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது.
விசாலமான உள் இடம். வெளிச்சுற்றில் வலம் வரும்போது சந்திரன்,
சனிபகவான் (காகத்தின் மீது ஒரு காலூன்றிய அமைப்பில்), சப்தமாதர்கள்,
பைரவர், நவக்கிரகங்கள், மகாலிங்கம், விசுவநாதர், விசாலாட்சி, விநாயகர்
முதலிய சந்நிதிகள் உள்ளன.