பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 621


     உள்வாயிலைக் கடந்து முன்மண்டபம் அடைந்து, வலம் வரும்போது,
வள்ளிதெய்வயானை சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர் சந்நிதிகள் உள.
அடுத்து திரு நீலநக்க நாயனார், அவருடைய மனைவி ஆகியோரின்
உருவங்கள் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் மங்கையர்க்கரசி
என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது. சோமாஸ்கந்தர், மகாகணபதி
சந்நிதிகளைத் தரிசித்துப் படிகளேறி உட்சென்றால் வலப்பால் உள்ள
நீலநக்கர், அவருடைய மனைவி, நடன சுந்தரர் முதலிய உற்சவத்
திருமேனிகளைத் தரிசிக்கலாம். நடராச சபை உள்ளது. அம்பலக்கூத்தர்,
அம்மை சிவகாமி மணிவாசகருடன் காட்சி தருகின்றார்.

     நேரே மூலவர் தரிசனம் - தெய்வீகப் பொலிவு கோஷ்ட
மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, நர்த்தனகணபதி, இலிங்கோற்பவர்,
பிரம்மா, பிட்சாடனர், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் முதலிய மூர்த்திகள்
உள்ளனர். இவற்றுள் அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது
ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது தரிசிக்கத்தக்கது.
இம்மூர்த்தங்களுடன் அகத்தியரும் உள்ளார்.

     அம்பாள் சந்நிதி பக்கத்தில் தனிக்கோயிலாகவுள்ளது. சூரியன்
விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கொன்றை (தலமரம்) உள்ளது.
நந்தி சற்று உயரத்தில் உள்ளது படிகளேறிச் சென்றால் மூஞ்சூறு வாகனத்தின்
மீது அமர்ந்துள்ள விநாயகரையும், தண்டபாணியையும் துவாரமூர்த்திகளாகத்
தரிசிக்கலாம். நேரே அம்பாள் தரிசனம் - நான்கு திருக்கரங்களுடன்கூடிய
நின்ற திருக்கோலம், பள்ளியறை உள்ளது.

     ‘ருத்ர வியாமள தந்திர’ ஆகம முறைப்படி நாடொறும் நான்கு கால
பூஜைகள் நடைபெறுகின்றன. ஆவணி மூலவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
இக்கோயிலுக்குப் பக்கத்தில் திருமருகல், திருநள்ளாறு முதலிய திருமுறைத்
தலங்கள் உள்ளன.

     (சோழர்காலக்) கல்வெட்டில் இத்தலத்து இறைவன் ‘அயவந்தி
உடையார்’ என்று குறிக்கப்பட்டுள்ளார்.

   
“வேதமாய் வேள்வியாகி விளங்கும் பொருள் வீடதாகிச்
    சோதியாய் மங்கை பாகன் நிலைதான் சொல்லலாவதொன்றே
    சாதியான் மிக்க சீரார் தகுவார் தொழும் சாத்தமங்கை
    ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே.” (சம்பந்தர்)