திருக்கோலமுள்ளது. மூலவருக்குப் பக்கத்தில் தியாகராஜா சந்நிதி. சுந்தரவிடங்கர் - பாராவாரதரங்க நடனம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரமன், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன. நாடொறும் ஆறுகால பூஜைகள் காமிக ஆகமப்படி நடைபெறுகின்றன. வைகாசி விசாகத்தில் விழா, நாகைக்காரோணத் தலபுராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பாடியுள்ளார்கள். அதிபத்த நாயனாருக்கு இறைவன் அருள்செய்த விழா ஆவணியில் நடக்கிறது. அந்நாயனார் வாழ்ந்த இடம் - செம்படவர்சேரி - தற்போது நம்பியாங்குப்பம் என்று வழங்குகிறது. இத்தலத்தில் உள்ள சௌந்தரராசப் பெருமாள் கோயில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். முதலாம் இராசராசன் காலத்திய கல்வெட்டொன்று இக்கோயிலுக்கு உள்ளது. டச்சு கவர்னர் ஒருவர் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்த செய்தியைச் சாசனம் ஒன்றின் மூலம் அறிகின்றோம். “ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள்நல்கிச் சேணின்றவர்க் கின்னஞ் சிந்தை செய வல்லான் பேணி வழிபாடு பிரியா தெழுந் தொண்டர் காணுங்கடல் நாகைக் காரோணத்தானே.” (சம்பந்தர்) “நிறைபுனல் அணிந்த சென்னி நீள்நிலா அரவஞ்சூடி மறையொலிபாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பமாமே." (அப்பர்) “பத்தூர் புக்கிரந்துண்டு பலபதிகம் பாடிப் பாவையரைக் கிறி பேசிப் படிறாடித்திரிவீர் செத்தார்தம் எலும்பு அணிந்து சேஏறித்திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கொரு நாள் இரங்கீர் முத்தாரம் இலங்கி மிளிர் மணி வயிரக்கோவை அவை பூணத் தந்தருளி மெய்க்கினிதா நாளும் கத்தூரி கமழ்சாந்தும் பணித்தருள வேண்டும் கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே." (சுந்தரர்) |