பக்கம் எண் :

626 திருமுறைத்தலங்கள்


     பூணிடபர் நீள்கௌரி தண்டியெண் திசைநாதர்
          போற்றுந்த சாயுதங்கள்
     பூமண்ட லத்திலுள தெய்வங்கள் வேதங்கள்
          புகழ்கொண்ட தேவர்முனிவர்
     காணவரு சிவராச தானியெனும் நாகைவரு
          கந்தசுவா மிவருகவே
     கைகண்ட அடியார்பணி மெய்கண்ட வேலவன்
          கருணையங் கடல்வருகவே.  - ஸ்ரீ சிதம்பரமுனிவர்

                                        - “தூத்தகைய
     பாகைக்காரென்னும் பணிமொழியார் வாழ்த்தோவா
     நாகைக் காரோண நயந்தோனே.”           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
 
    
அ/மி. காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்
     நாகப்பட்டினம் & அஞ்சல்
     நாகப்பட்டினம் வட்டம் - மாவட்டம் - 611 001.

200/83. சிக்கல்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     திருவாரூர் - நாகப்பட்டினம் பேருந்துச்சாலையில் உள்ள தலம். சிக்கல்
ஊரையடைந்து வலப்புறமாகத் திரும்பினால் கோயிலையடையலாம். கோயில்
வரை வாகனங்கள் செல்லும். இத்தலத்தையடுத்து இதே சாலையில்
நாகப்பட்டினம் உள்ளது.

     வசிட்டர், காமதேனுவின் வெண்ணெய்யினால் சிவலிங்கம் அமைத்து
வழிபட்டு, பூசைமுடிவில் அதையெடுக்க முயன்றபோது முடியாமற் சிக்கிக்
கொண்டமையின் ‘சிக்கல்’ என்று பெயர் பெற்றது. மல்லிகைவனம் என்பது
இதன்வேறு பெயர்.

     இறைவன் - நவநீதேஸ்வரர், வெண்ணெய்நாதர், வெண்ணெய்ப்பிரான்

     இறைவி - சத்தியதாட்சி, வேல்நெடுங்கண்ணி.