பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 627


     தலமரம் - குடமல்லிகை
     தீர்த்தம் - க்ஷீரபுஷ்கரணி, கயாதீர்த்தம், லட்சுமி தீர்த்தம் என்பன.

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     மாடக்கோயில். சுவாமி சந்நிதி கட்டுமலைமேல் உள்ளது. மிகப்
பெரியகோயில். இங்குள்ள சிங்காரவேலர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது.
க்ஷீரபுஷ்கரணி (பாற்குளம்) கோயிலின் மேற்கில் உள்ளது. இதற்கு
அமிர்ததடாகம் என்றும் பெயர். கோலவாமனப் பெருமாள் நீராடி இறைவனை
வழிபட்ட தீர்த்தம் கயாதீர்த்தம் - மேற்கே உள்ளது.

     இப்பெருமாளுக்கு “கயாமாதவன்” என்றும் பெயர். இலக்குமி தீர்த்தம்
கிழக்கில் உள்ளது.

     இக்கோயிலருகில் விருத்தகாவேரி எனப்படும் ஓடம்போக்கியாறு
ஓடுகிறது. நகரத்தார் திருப்பணி பெற்ற கோயில். கோயிலின் முன்னால்
பெரிய கல்யாண மண்டபம் உள்ளது. ஏழுநிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே
சென்றால் பிராகாரம் நந்தவனப் பகுதியாக உள்ளது. பக்கத்தில் கோலவாமனப்
பெருமாள் சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது. (தாயார் கோமளவல்லி).
உள்வாயிலைத் தாண்டிச் சென்றால் பிராகாரத்தில் விநாயகர், அறுபத்துமூவர்,
சனீஸ்வரன், (கருவறைச்சுவரில் வசிட்டரும் அவருடைய சீடர்களும்
காமதேனுவும் வழிபடுவது போன்ற சிற்பம் உள்ளது.) தலமரம் மல்லிகை,
விசுவநாதர், கார்த்திகைவிநாயகர், கஜலட்சுமி, ஆறுமுகர், பைரவர்,
நவக்கிரகம், சூரியன், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன.

     வலமுடித்து முன்மண்டபம் அடைந்தால் வலப்பால் அம்பாள்
சந்நிதியுள்ளது - நின்ற திருக்கோலம். சுந்தரகணபதியைத் தொழுது
படிகளேறிக் கட்டுமலைமீது சென்றால் நேரே தியாகராஜ சந்நிதி உள்ளது.
இது சப்தவிடங்கத்தலங்களுள் அடங்காது. இங்கு மரகதலிங்கம் உள்ளது.
(மரகதவிடங்கர்) வலப்பால் சிங்காரவேலர் - மிகவும் பிரசித்தி பெற்றது.
இத்தலம் இப்பெருமான் பெயராலேயே (சிக்கல் சிங்காரவேலர்) புகழ்பெற்று
விளங்குகிறது. இம்முருகப்பெருமானுக்கு எல்லாவிதமான ஆபரணங்களும்
தங்கத்தால் செய்யப்பட்டுள்ளன. நேரே மூலவர் தரிசனம் - சிவலிங்கத்
திருமேனி. சதுரபீடம் - குழைவான குட்டையான பாணம். சோமாஸ்கந்தர்
சந்நிதி சிறப்பானது. நடராசசபை உள்ளது. உற்சவத்திருமேனிகள் வரிசையாக
வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன.